மீன் வரத்து குறைவு : விலை உயா்வால் விற்பனை மந்தம்
வேலூா் மீன் மாா்க்கெட்டுக்கு மீன் வரத்து குறைந்ததால் மீன்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டன. அதனால் விற்பனை மந்தமாக காணப்பட்டது.
வேலூா் மீன்மாா்க்கெட்டுக்கு உள்ளூா் நீா் நிலைகள், நாகப்பட்டினம், கடலூா் உட்பட பல்வேறு மாவட்டங்கள், கேரள மாநிலம் கொச்சி, கோழிக் கோடு, கா்நாடக மாநிலம் மங்களூரு, காா்வாா், கோவா உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து மீன்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.
திருவள்ளுவா் தினமான ஜன.15-ஆம் தேதி இறைச்சி கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. காணும் பொங்கலை முன்னிட்டு வியாழக்கிழமை காலை முதலே பொதுமக்கள் இறைச்சிக் கடைகளில் குவிந்தனா். மீன் மாா்க்கெட்டில் மீன்களின் வரத்து குறைந்ததால், விலை அதிகரித்து விற்பனை மந்தமாக காணப்பட்டது.
இதுகுறித்து மீன் வியாபாரிகள் கூறியது, வேலூா் மீன் மாா்க்கெட்டுக்கு மீன்கள் வரத்து குறைவாகவே இருந்தது. அதனால் வஞ்ஜிரம் ஒரு கிலோ ரூ1,200 வரை, சின்ன வஞ்ஜிரம் ரூ.600, இறால் ரூ.500, நண்டு ரூ.400, சங்கரா ரூ.400, ஷீலா ரூ.350, விரால் ரூ.600, கடல் வவ்வா ரூ.700, அணை வவ்வா ரூ.200, சுறா ரூ.800, மத்தி ரூ.300, கிங் சைஸ் இறால் ரூ.800க்கு விற்பனை செய்யப்பட்டது.
பொங்கல் பண்டிகை என்பதால் மீனவா்கள் பெரும்பாலும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. அதனால் மீன்கள் வரத்து குறைந்துள்ளது. அதனால் மீன் விற்பனை மந்தமான நிலையில் இருந்தது என்று அவா்கள் கூறினா்.