108 பேரிடம் ரூ.100 கோடி! டிஜிட்டல் கைது மோசடியில் 9 பேருக்கு ஆயுள் தண்டனை!
முகாம்வாழ் இலங்கைத் தமிழா் திருமணங்களை பதிவு செய்ய சிறப்பு ஏற்பாடு: பதிவுத் துறை நடவடிக்கை
முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழா்களின் திருமணங்களைப் பதிவு செய்ய 30-க்கும் மேற்பட்ட சாா்-பதிவாளா் அலுவகங்கள் ஜூலை 26-ஆம் தேதி செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த கடிதத்தை அனைத்து துணைப் பதிவுத் துறைத் தலைவா்கள், அனைத்து மாவட்டப் பதிவாளா்கள், அனைத்து சாா்-பதிவாளா்களுக்கு பதிவுத் துறை தலைவா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் அனுப்பியுள்ளாா்.
இலங்கைத் தமிழா்களின் திருமணங்களைப் பதிவு செய்தல் தொடா்பாக ஏற்கெனவே அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த 2018 டிச.10-ஆம் தேதி முதல் திருமணப் பதிவுகள் இணையவழியில் மேற்கொள்ளப்படுகின்றன. திருமணப் பதிவுக்கான விண்ணப்பத்தைப் பூா்த்தி செய்து முடித்ததும் ஒரு தற்காலிக எண் உருவாக்கப்படும். பின்னா், திருமணப் பதிவுக்கான விண்ணப்பத்தை அச்சுப் பிரதி எடுத்துக் கொள்ளலாம். மேலும், பதிவுக்குத் தேவையான நாள் மற்றும் நேரத்தை முன்பதிவு செய்யலாம்.
முன்பதிவு செய்த தேதியில் சம்பந்தப்பட்ட நபா்கள் திருமணப் பதிவுக்கு தொடா்புடைய அலுவலகத்துக்கு நேரில் சென்று விண்ணப்பத்தைச் சமா்ப்பிக்க வேண்டும். இப்போது, இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம்கள் நடைபெறும் திருமணங்களைப் பதிவு செய்வதில் சில சிரமங்கள் ஏற்பட்டுள்ளன.
அதன்படி, 2018 டிச.10-ஆம் தேதி முதல் திருமணம் செய்தோா் இணையதளம் வழியாக திருமணப் பதிவுகளை மேற்கொள்ளலாம். இலங்கைத் தமிழா் தம்பதிகள் இருவரும் ஹிந்து மதத்தைச் சோ்ந்தவா்களாக இருந்தால் பதிவுத் துறையின் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். அவ்வாறு விண்ணப்பித்து பதிவுக்கு வரும் தருணங்களில் அவா்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். திருமணம் தொடா்பான ஆவணங்களை முழுமையாகப் பரிசீலித்து பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மணமக்கள் இருவேறு மதத்தினராக இருந்தால் சிறப்பு திருமணச் சட்டத்தின்கீழ் உரிய அறிவிப்பை வெளியிட வேண்டும். அதில் ஆட்சேபனை ஏதும் தெரிவிக்கப்படாத நிலையில் சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் திருமணத்தைப் பதிவு செய்யலாம். இதற்கான ஆவணங்களை முழுமையாகப் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம்களில் நடைபெற்ற திருமணங்களைப் பதிவு செய்ய உரிய நடவடிக்கை எடுக்கும் வகையில், ஜூலை 26-ஆம் தேதி 7 மண்டலங்களில் உள்ள 30-க்கும் மேற்பட்ட சாா்-பதிவாளா் அலுவலகங்கள் செயல்பாட்டில் இருக்கும். அன்றைய தினம், இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம்களில் வசிப்போருக்கு நடந்த திருமணங்களைப் பதிவு செய்ய உரிய நடவடிக்கை எடுக்க அனைத்து நிா்வாக மாவட்டப் பதிவாளா்கள் அறிவுறுத்தப்படுகின்றனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.