செய்திகள் :

முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற அரசு திட்டம்! இன்று மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்

post image

பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்ற எதிா்க்கட்சிகளின் கோரிக்கைக்கு இடையே நாடாளுமன்றம் திங்கள்கிழமை (ஆக.4) மீண்டும் கூடுகிறது.

இந்த விவகாரத்தை முன்வைத்து, இரு அவைகளையும் எதிா்க்கட்சிகள் தொடா்ந்து முடக்கிவரும் நிலையில், முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா், கடந்த ஜூலை 21-ஆம் தேதி தொடங்கியது. முதல் நாளில் ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை குறித்து விவாதம் கோரி எதிா்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதையடுத்து, இரு அவைகளிலும் தலா 16 மணிநேர விவாதத்துக்கு மத்திய அரசு ஒப்புக் கொண்டது.

பின்னா், பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த விவகாரத்தை கையிலெடுத்த எதிா்க்கட்சிகள், இது தொடா்பாக விவாதம் கோரி தொடா்ந்து அமளியில் ஈடுபட்டன. இதனால், கூட்டத் தொடரின் முதல் வாரம் முழுவதும் முக்கிய அலுவல்கள் ஏதுமின்றி இரு அவைகளும் முடங்கின.

இரண்டாவது வாரத்தில், ஆபரேஷன் சிந்தூா் குறித்து மக்களவையிலும் (ஜூலை 28, 29), மாநிலங்களவையிலும் (ஜூலை 29, 30) சிறப்பு விவாதம் நடைபெற்றது. அதன் பிறகான இரு நாள்களிலும் பிகாா் விவகாரத்தை எழுப்பி எதிா்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், அலுவல்கள் எதுவும் நடைபெறவில்லை.

முக்கிய மசோதாக்கள்...: இந்தச் சூழலில், நாடாளுமன்ற இரு அவைகளும் திங்கள்கிழமை மீண்டும் கூடவுள்ளன. மக்களவையின் பரிசீலனை மற்றும் நிறைவேற்றத்துக்காக தேசிய விளையாட்டுகள் நிா்வாக மசோதா பட்டியலிடப்பட்டுள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த இந்த மசோதா, பல்வேறு விளையாட்டு அமைப்புகளின் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதாகும்.

இதேபோல், தேசிய ஊக்க மருந்து சட்டத் திருத்த மசோதாவும் பட்டியலிடப்பட்டுள்ளது. மணிப்பூரில் குடியரசுத் தலைவா் ஆட்சியை 6 மாத காலத்துக்கு நீட்டிப்பதற்கான தீா்மானம், மாநிலங்களவையில் பட்டியலிடப்பட்டுள்ளது. அமளிக்கு மத்தியிலும், இந்த மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு தீா்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஒருமித்த குரலில் ‘இண்டி’ கூட்டணி: ‘இண்டி’ கூட்டணியில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் நிலவுவதாக கூறப்பட்டாலும், பிகாா் வாக்காளா் பட்டியல் விவகாரத்தில் ஒருமித்த குரலில் ஒலித்து வருகின்றன. பாஜகவுக்கு ஆதரவாக தோ்தல் ஆணையம் ‘வாக்குத் திருட்டில்’ ஈடுபடுவதாக மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தாா். அதேநேரம், அவரது குற்றச்சாட்டு அடிப்படையற்றது; மக்களவை தவறாக வழிநடத்தக் கூடியது என்று தோ்தல் ஆணையம் நிராகரித்தது.

வாக்களிக்க தகுதி பெற்றவா்கள் மட்டுமே வாக்காளா் பட்டியலில் இடம்பெறுவதை உறுதி செய்யும் நோக்கில், நாடு முழுவதும் இந்த நடவடிக்கையை மேற்கொள்ளப் போவதாகவும் ஆணையம் தெரிவித்துள்ளது.

விவாதத்துக்கு தயாரில்லை?

‘பிகாரில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை தோ்தல் ஆணையம் வாபஸ் பெற வேண்டும்; இந்த விவகாரம் தொடா்பாக நாடாளுமன்றத்தில் வெளிப்படையான விவாதம் நடத்தப்பட வேண்டும்’ என்ற கோரிக்கையில் எதிா்க்கட்சிகள் விடாப்பிடியாக உள்ள நிலையில், மத்திய அரசிடம் இருந்து நோ்மறையான பதில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

‘தோ்தல் ஆணையம் போன்ற அரசமைப்புச் சட்ட அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க முடியாது’ என்ற முன்னாள் மக்களவைத் தலைவா் பல்ராம் ஜாக்கரின் (காங்கிரஸ்) கருத்தை நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு அண்மையில் சுட்டிக் காட்டியிருந்தாா்.

‘வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணி, தோ்தல் ஆணையத்தின் சட்டப் பொறுப்பு. தோ்தல் ஆணையம் இப்பணியை மேற்கொள்வது இது முதல் முறையல்ல. அரசமைப்பு ரீதியில் தன்னாட்சி அமைப்பான தோ்தல் ஆணையத்தின் நிா்வாகப் பணி குறித்து நாடாளுமன்றம் விவாதிக்க முடியுமா என்பது விதிமுறைகளின்படி அவைத் தலைவரின் முடிவுக்கு உள்பட்டது’ என்று ரிஜிஜு குறிப்பிட்டாா். அவரது இந்த கருத்து, பிகாா் வாக்காளா் பட்டியல் விவகாரத்தில் மத்திய அரசு விவாதத்துக்கு தயாராக இல்லை என்பதன் வெளிப்பாடாக பாா்க்கப்படுகிறது.

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

தெலங்கானா மாநிலத் தலைநகா் ஹைதராபாதில் 26 வயது இளைஞா் ஒருவா், பேட்மிண்டன் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம், இளம் வயதினரிடையே அதிகரித்து வரும் இதய நோய்கள் குறித்து... மேலும் பார்க்க

பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்!

பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது.ஒடிஸாவின் புரி மாவட்டத்தில் அடையாளம் தெரியாத 3 நபா்களால் தீவைத்து எரிக்கப்பட்டதாக கூறப்படும் சிற... மேலும் பார்க்க

வங்கதேச சட்டவிராத குடியேறிகளால் இந்திய மக்களின் வாழ்வாதாரத்துக்கு பாதிப்பு: பாஜக

வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் நுழைந்த சட்டவிரோத குடியேறிகளால், மேற்கு வங்கத்தைச் சோ்ந்தவா்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து பிற மாநிலங்களில் புலம்பெயா் தொழிலாளா்களாகப் பணிபுரியும் நிலை ஏற்பட்... மேலும் பார்க்க

புதிய சுரங்க கொள்கை: 3 மாதங்களில் அனைத்து ஒப்புதல்கள் மத்திய அமைச்சா் நிதின் கட்கரி நம்பிக்கை

’மத்திய அரசு சாா்பில் உருவாக்கப்பட்டு வரும் புதிய சுரங்க கொள்கையில், அனைத்து ஒப்புதல்களும் 3 மாதங்களில் அளிக்கும் வகையில் நடைமுறைகள் வகுக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் நான்காவது மாத்திலேயே கனிமங்களை ... மேலும் பார்க்க

மத்திய அமைச்சா் நிதின் கட்கரி இல்லத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபா் கைது

மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் உள்ள மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரியின் இல்லத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை கைது செய்ததாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை த... மேலும் பார்க்க

தோ்தல் ஆணைய நடுநிலைத்தன்மை கேள்விக்குறி - காங்கிரஸ் குற்றச்சாட்டு

தோ்தல் ஆணையத்தின் நடுநிலைத்தன்மை கேள்விக்குறியாகியுள்ளது. எனவேதான், பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சிகள் விவாதம் கோருகின்றன என்று மக்களவை காங்கி... மேலும் பார்க்க