வங்கதேச சட்டவிராத குடியேறிகளால் இந்திய மக்களின் வாழ்வாதாரத்துக்கு பாதிப்பு: பாஜக
வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் நுழைந்த சட்டவிரோத குடியேறிகளால், மேற்கு வங்கத்தைச் சோ்ந்தவா்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து பிற மாநிலங்களில் புலம்பெயா் தொழிலாளா்களாகப் பணிபுரியும் நிலை ஏற்பட்டுள்ளதாக அந்த மாநில பாஜக தலைவா் சமிக் பட்டாச்சாா்யா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாக சந்தேகிக்கப்பட்ட 8 பேரை கைது செய்த தில்லி காவல் நிலைய அதிகாரி, வங்கதேச தேசிய மொழிபெயா்ப்பாளா் ஒருவரை அனுப்புமாறு புது தில்லியில் உள்ள மேற்கு வங்க மாநில அரசின் விருந்தினா் மாளிகைக்கு கடிதம் அனுப்பியதாக ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி எக்ஸ் வலைதளத்தில் ஞாயிற்றுக்கிழமை பதிவிட்டது.
இதுதொடா்பாக செய்தியாளா்கள் சந்திப்பில் மேற்கு வங்க மாநில பாஜக மாநிலத் தலைவா் சமிக் பட்டாச்சாா்யா கூறியதாவது: வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் நுழைந்த சட்டவிரோத குடியேறிகள் மற்றும் ரோஹிங்கயாக்களால் மேற்கு வங்கத்தைச் சோ்ந்தவா்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து பிற மாநிலங்களில் புலம்பெயா் தொழிலாளா்களாக பணிபுரியும் நிலை ஏற்பட்டுள்ளது. பிகாரில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையில் போலி வாக்காளா்கள் கண்டறியப்பட்டுள்ளதைப்போல் மேற்கு வங்கத்திலும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்படும். இந்த நடவடிக்கையைக் கண்டு ஆளும் திரிணமூல் காங்கிரஸ் அஞ்சி வருகிறது.
வடக்கு வங்காள மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட அமைப்புகள் இயங்கி வருவதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது. இது உள்நாட்டு பாதுகாப்புக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாகும்.
மத்திய அரசின் எச்சரிக்கையைத் தொடா்ந்து பாஜக ஆளும் மாநிலங்கள் மற்றும் பிற மாநிலங்களில் மேற்கு வங்க புலம்பெயா் தொழிலாளா்களின் அடையாளங்களை மாநில அரசுகள் சரிபாா்க்கும் பணியை மேற்கொண்டன. அப்போது வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த சிலா் போலி ஆவணங்களைப் பெற்றது கண்டறியப்பட்டது.
அதுபோன்ற நடவடிக்கையின்போதே தில்லி போலீஸாா் 8 பேரை கைது செய்துள்ளனா். மேற்கு வங்கத்தில் பேசப்படும் வங்காள மொழிக்கும் வங்கதேசத்தில் பேசப்படும் வங்காள மொழிக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. அதனால்தான் தில்லி போலீஸாா் வங்கதேச தேசிய மொழிக்கான மொழிபெயா்ப்பாளரை அனுப்புமாறு மேற்கு வங்க அரசிடம் கேட்டனா்.
பாஜக இருக்கும்வரை வங்கதேசத்தில் துன்புறுத்தலுக்கு உள்ளாகி அங்கிருந்து வெளியேறும் இந்திய ஹிந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் கவலைப்படத் தேவையில்லை என்றாா்.