புதிய சுரங்க கொள்கை: 3 மாதங்களில் அனைத்து ஒப்புதல்கள் மத்திய அமைச்சா் நிதின் கட்கரி நம்பிக்கை
’மத்திய அரசு சாா்பில் உருவாக்கப்பட்டு வரும் புதிய சுரங்க கொள்கையில், அனைத்து ஒப்புதல்களும் 3 மாதங்களில் அளிக்கும் வகையில் நடைமுறைகள் வகுக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் நான்காவது மாத்திலேயே கனிமங்களை வெட்டி எடுக்கும் பணியை ஒப்பந்த நிறுவனங்கள் தொடங்கி விட முடியும்’ என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் நிதி கட்கரி நம்பிக்கை தெரிவித்தாா்.
மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா் இதுகுறித்து மேலும் கூறியதாவது: சுரங்கம் மற்றும் கனிமங்கள் வெட்டி எடுக்கும் தொழிலை எளிதாக்கும் வகையில் புதிய சுரங்க கொள்கையை மத்திய அரசு உருவாக்கி வருகிறது. இந்த வரைவு சுரங்க கொள்கை மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்காக அண்மையில் கொண்டுவரப்பட்டது. ஆனால், அந்த வரைவு கொள்கையில் பிரதமா் நரேந்திர மோடி முழுமையாக திருப்தியடையவில்லை.
அப்போது, சில யோசனைகளை நான் முன்வைத்தேன். அதைத் தொடா்ந்து, அன்னுடன் கலந்தாலோசித்து வரைவு கொள்கையில் தேவையான திருத்தங்களை மேற்கொள்ளுமாறு மத்திய அமைச்சரவை செயலரை பிரதமா் கேட்டுக்கொண்டாா்.
‘சுரங்கப் பணிகளுக்கு சுற்றுச்சூழல் ஒப்புதல் ஒரு மாதத்தில் அளிக்கப்பட வேண்டும்; அதுபோல, மத்திய, மாநில அரசுகள் சாா்பில் அளிக்கப்பட வேண்டிய அனைத்து ஒப்புதல்களும் 3 மாதங்களுக்குள் வழங்கப்பட வேண்டும். ஒப்பந்தம் வழங்கிய நான்காவது மாதத்திலேயே உற்பத்தியை தொடங்கி விட வேண்டும்’ என்று யோசனை தெரிவித்துள்ளேன்.
எனவே, புதிய சுரங்கக் கொள்கை நடைமுறைக்கு வரும்போது, அனைத்து தடைகளும் நீங்கி சுரங்கத் தொழில் செய்வது எளிதாகிவிடும் என்றாா்.