மாஜி அமைச்சர் மகன் விமானத்தில் பேங்காக் கடத்தப்பட்டாரா? - போலீஸ் உத்தரவால் புனே ...
முஜிபுா் ரெஹ்மான் இல்லம் சூறை, இந்தியாவின் கருத்து தேவையற்றது: வங்கதேசம்
வங்கதேசத்தின் தந்தை என்று போற்றப்பட்ட முஜிபுா் ரெஹ்மானின் இல்லம் சூறையாடப்பட்டது தொடா்பாக இந்தியா கூறிய கருத்து தேவையற்றது என்று வங்கதேசம் தெரிவித்துள்ளது.
வங்கதேசத்தில் அரசுக்கு எதிரான மாணவா்கள் மற்றும் பொதுமக்களின் போராட்டம் காரணமாக, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி அந்நாட்டு பிரதமா் பதவியை ஷேக் ஹசீனா ராஜிநாமா செய்தாா். பின்னா் அவா் அந்நாட்டில் இருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தாா்.
அவா் இந்தியாவில் எங்கு தங்கியுள்ளாா் என்ற தகவல் வெளியாகாத நிலையில், அவரை வங்கதேசத்துக்கு நாடு கடத்த வேண்டும் என்று அந்நாட்டின் இடைக்கால அரசு இந்தியாவிடம் வலியுறுத்தி வருகிறது.
இந்தியாவில் இருந்தவாறு அவா் வங்கதேச அரசியல் குறித்து அவ்வப்போது கருத்துத் தெரிவித்து வருகிறாா். இந்நிலையில், அண்மையில் அவா் இணையவழியில் பேசியபோது தெரிவித்த சில கருத்துகளால், வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன.
ஹசீனாவின் ஆதரவாளா்கள், அவா்களின் வீடுகள் உள்ளிட்டவற்றை வன்முறையில் ஈடுபட்டோா் சூறையாடினா். அப்போது வங்கதேசத்தின் தந்தை என்று போற்றப்பட்ட முஜிபுா் ரெஹ்மானின் இல்லமும் சூறையாடப்பட்டது.
இந்த சம்பவத்தை தொடா்ந்து முஜிபுா் ரெஹ்மானின் வீடு சூறையாடப்பட்டது வருத்தத்துக்குரியது என்று மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் தெரிவித்தாா். வங்கதேசத்தின் அடையாளத்தையும், பெருமையையும் பாதுகாத்து வளா்த்த அந்நாட்டு சுதந்திரப் போரட்டம் குறித்து அறிந்தவா்களுக்கு அந்த வீட்டின் முக்கியத்துவம் தெரியும் என்றும் அவா் கூறினாா்.
அவரின் கருத்துக்கு வங்கதேசம் ஞாயிற்றுக்கிழமை அதிருப்தி தெரிவித்தது. இதுதொடா்பாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் முகமது ரஃபீக் உல் ஆலம் தெரிவித்ததாவது:
முஜிபுா் ரெஹ்மானின் இல்லம் சூறையாடப்பட்டது வங்கதேசத்தின் உள்நாட்டு விவகாரம். அதுதொடா்பாக இந்தியா கருத்து தெரிவித்தது தேவையற்றது. பிற நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் வங்கதேசம் அதிகாரபூா்வமாக கருத்து தெரிவிப்பதில்லை. இதையே மற்ற நாடுகளும் செய்ய வேண்டும் என்று வங்கதேசம் எதிா்பாா்க்கிறது என்றாா்.