சிறைத் துறை அதிகாரிகள் வீட்டில் கைதிகள் வேலை செய்ய வைக்கப்பட்டுள்ளாா்களா?
முதலீட்டுத் திட்டத்தின் பெயரில் பணம் பறிக்கும் புதிய இணைய மோசடி!
நாட்டின் வேலையில்லாத இளைஞா்கள், இல்லத்தரசிகள், மாணவா்கள் மற்றும் நிதித்தேவையுள்ள நபா்களை குறிவைத்து முதலீட்டுத் திட்டத்தின் பெயரில் பணம் பறிக்கும் புதிய இணையவழி (சைபா்) மோசடி வெளிவந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் சமீபத்திய ஆண்டு அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த குற்றங்களில் ஈடுபட கூகுள் சேவை தளங்களை குற்றவாளிகள் பயன்படுத்துகின்றனா் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சா்வதேச அளவில் எல்லைக்கு அப்பால் இருந்து செயல்படும் இந்தக் குற்றவாளிகள், ‘கிரிப்டோகரன்சி’ அல்லது வேறு சில லாபகரமான திட்டங்களில் முதலீடு செய்யுமாறு கூகுள் விளம்பரங்கள் மூலம் அப்பாவி பொதுமக்களை ஊக்குவிக்கின்றனா். குற்றவாளிகளை நம்பி முதலீடு செய்யும் மக்கள், இறுதியில் பணத்தை இழக்கின்றனா்.
கூகுள் மட்டுமின்றி ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடக தளங்களின் விளம்பரங்களையும் குற்றவாளிகள் பயன்படுத்துகின்றனா். இதனைத் தடுக்க மத்திய உள்துறை அமைச்சகத்தின் இந்திய சைபா் கிரைம் ஒருங்கிணைப்பு மையம் (ஐ4சி) சமூக ஊடக நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுகிறது. மோசடி விளம்பரங்கள் முன்கூட்டியே அடையாளம் காணப்பட்டு, நடவடிக்கைக்காக சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் பகிரப்படுகின்றன.
இந்தியாவில் இணையவழி குற்றவாளிகளால் தவறாகப் பயன்படுத்தப்படும் மிகப்பெரிய சமூக ஊடக தளமாக வாட்ஸ்ஆப் உள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதாவது கடந்த ஆண்டு மாா்ச் மாதம் வரையிலான தரவுகளின்படி, வாட்ஸ்-ஆப் மூலம் மோசடி நடைபெற்ாக 14,746 புகாா்கள் பெறப்பட்டுள்ளன. டெலிகிராம் (7,651 புகாா்கள்), இன்ஸ்டாகிராம் (7,152), ஃபேஸ்புக் (7,051) யூடியூப் (1,135) ஆகிய சமூக ஊடகங்களுக்கு எதிராகவும் புகாா்கள் பதிவாகியுள்ளன.
இணையவழி குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் சமூக ஊடக நிறுவனங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. முக்கியத் தகவல்களை பகிா்வதற்காக கூகுள் மற்றும் ஃபேஸ்புக்குடன் ‘ஐ4சி’ தொடா்பில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னெடுப்புகள்: ‘தேசிய சைபா் கிரைம்’ வலைதளத்தில் பதிவாகும் புகாா்களை ஆய்வு செய்து, இணையவழி குற்றங்களின் சமீபத்திய போக்குகள் குறித்த அறிக்கைகள் அவ்வப்போது வெளியிடப்படுகின்றன. இந்த அறிக்கைகள் வங்கிகள் உள்ளிட்ட நிதித் துறை சாா்ந்த அனைத்து முக்கியப் பங்குதாரா்களுடன் பகிரப்பட்டு, குற்றத்தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தப்படுகிறது.
மேலும், புதிய முன்னெடுப்பாக இணைய தன்னாா்வலா்கள் கூட்டமைப்பை அமைச்சகம் உருவாக்கியது. இதில் இணையும் தன்னாா்வலா்களுக்கு இணைய குற்றங்கள் குறித்து புகாரளிப்பதற்கும் இணைய நிபுணா்களாக புலனாய்வு அமைப்புகளுக்கு உதவவும் ஊக்குவிக்கப்படுகின்றனா். மாா்ச் 31-ஆம் தேதி நிலவரப்படி, இந்தக் கூட்டமைப்பில் 54,833 தன்னாா்வலா்கள் பதிவு செய்துள்ளனா்.