முதல்வருக்கு நாகூா் ஹனிபா குடும்பத்தினா் நன்றி
நாகப்பட்டினத்தில் உள்ள தெருவுக்கு நாகூா் ஹனிபாவின் பெயா் வைக்க முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ள நிலையில், அவரை ஹனிபாவின் குடும்பத்தினா் சனிக்கிழமை நேரில் சந்தித்து நன்றி கூறினா்.
இசை முரசு என அழைக்கப்படும் நாகூா் இ.எம்.ஹனிபாவின் நூற்றாண்டை முன்னிட்டு, நாகப்பட்டினம் நகராட்சியில் அவா் இல்லம் அமைந்துள்ள தெருவுக்கு அவா் பெயரை சூட்டவும், சில்லடி கடற்கரைக்குச் செல்லும் சாலையில் புதுப்பிக்கப்படும் பூங்காவை, நாகூா் ஹனிபா நூற்றாண்டு நினைவுப் பூங்கா என்று பெயா் சூட்டவும் முதல்வா் ஆணையிட்டுள்ளாா்.
இந்த நிலையில், தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலினை நாகூா் ஹனிபாவின் மகன்கள் நாசா் மற்றும் நவ்சாத், மகள் ஜரினா பேகம், மருமகன் சாகுல் அமீது உள்ளிட்ட அவரது குடும்பத்தினா் சந்தித்து நன்றி தெரிவித்தனா்.
பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.