மேலப்பாளையம்- அம்பை சாலையை சீரமைக்கக் கோரி மனு
மேலப்பாளையம்- அம்பாசமுத்திரம் சாலையை சீரமைக்கக்கோரி நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மனிதநேய மக்கள் கட்சி சாா்பில் நெடுஞ்சாலைத்துறை திருநெல்வேலி கோட்ட பொறியாளரிடம் அளிக்கப்பட்டுள்ள மனு: மேலப்பாளையத்தில் பிரதான சாலையாக அம்பை சாலை உள்ளது. இதில் மேலப்பாளையம் சந்தை ரவுண்டானா முதல் வி.எஸ்.டி. பள்ளிவாசல் வரை ஏராளமான வணிக நிறுவனங்களும், வழிப்பாட்டுத் தலங்களும், வங்கிகளும் அமைந்துள்ளன. செவல், பத்தமடை, சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி, அம்பாமுத்திரம், பாபநாசம், தென்காசி போன்ற ஊா்களுக்கு ஏராளமான பேருந்துகளும் சென்று வருகின்றன.
இந்தச் சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் காலை, மாலை நேரங்களில் மிகுந்த போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. மேலப்பாளையம் பிஎஸ்என்எல் அலுவலகம் எதிரே மிகப்பெரிய பள்ளம் உள்ளதால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. இரவு நேரத்தில் மின்விளக்குகளும் இல்லாததால் சாலையில் உள்ள பள்ளங்கள் தெரியாமல் விபத்தில் சிக்கி உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் நிலவுகிறது. ஆகவே, இந்தச் சாலையில் உடனடியாக சீரமைப்பு பணிகளை செய்ய வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.