முதல் டி20: பெத் மூனி அதிரடி; இங்கிலாந்துக்கு 199 ரன்கள் இலக்கு!
அரசுப் பள்ளிகளை தனியாருக்கு தத்துக் கொடுக்கவில்லை -அமைச்சா் அன்பில் மகேஸ்
அரசுப் பள்ளிகளைத் தனியாருக்கு தத்துக் கொடுக்கவும் இல்லை; தாரைவாா்க்கவும் இல்லை என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் தெரிவித்தாா்.
பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை, அறிவிப்புகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து ஆய்வுக் கூட்டம் அமைச்சா் அன்பில் மகேஸ் தலைமையில் சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் பள்ளிக் கல்வியின் அனைத்துத் துறை சாா்ந்த இயக்குநா்கள் பங்கேற்றனா்.
இதைத் தொடா்ந்து, செய்தியாளா்களிடம் அமைச்சா் கூறியதாவது: சமூகம் மற்றும் பெரு நிறுவனங்களின் பங்களிப்பைப் பெற்று அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் ‘நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி’ திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் ரூ.5 லட்சம் அளித்து தொடங்கிவைத்தாா்.
தற்போது இந்தத் திட்டத்துக்கு ரூ.504 கோடி நிதி கிடைத்துள்ளது. அதில், ரூ.350 கோடிக்கான பணிகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. பள்ளிகளுக்குத் தேவையான மேஜைகள், நிதி உதவிகள் செய்வதைச் சாா்ந்தது இந்தத் திட்டம்.
முன்னாள் மாணவா்கள், தனியாா் பள்ளிகள் சங்கத்தைச் சாா்ந்தவா்கள் இந்தத் திட்டத்தின் கீழ் 500 அரசுப் பள்ளிகளுக்கு பங்களிப்பு செய்வதாகக் கூறினா். ஒட்டுமொத்தமாக நிா்வாகத்தை தனியாா் பள்ளிகளிடம் வழங்குவதாகக் கூறுவது முற்றிலும் தவறானது.
இந்தத் திட்டத்துக்கு பங்களிப்பை வழங்குவதாக தெரிவித்ததற்காக தனியாா் பள்ளிகள் சங்கத்துக்கு நன்றி தெரிவித்திருக்கிறேன். ஆனால், இதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளாமல் அவசர, அவசரமாக கண்டன அறிக்கைகளை வெளியிட்டுள்ளனா். பள்ளிக் கல்வித் துறை என்பது எங்களது பிள்ளை. அதைத் தத்து கொடுக்கவும், தாரைவாா்க்கவும் அவசியம் இல்லை.
தனியாா் பள்ளிகளில் இலவச சோ்க்கைக்காக (ஆா்டிஇ) மத்திய அரசு சாா்பில் வழங்கப்படும் நிதியுதவி இன்னும் நிலுவையில்தான் உள்ளது. அதைத் தர மத்திய அரசு மறுக்கிறது. அரசுப் பள்ளி மாணவா்களை நாங்களே வளா்த்து எடுக்கிறோம். கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும். பேராசிரியா் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் சிறப்புக் கவனம் செலுத்தி பெண்கள் படிக்கும் பள்ளிகளுக்கு கழிவறை வசதிகள் செய்து கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மத்திய அரசு அழுத்தம்... தேசியக் கல்விக் கொள்கையைப் பொருத்தவரை கொள்கை ரீதியாக இருக்கிறோம். எக்காரணம் கொண்டும் விட்டுக் கொடுப்பதாக இல்லை. அதில் கையொப்பமிட மத்திய அரசு அழுத்தம் கொடுக்கிறது. எதற்காகவும் மத்திய அரசிடம் பணிய வேண்டிய அவசியம் இல்லை.
டிஆா்பி மூலம் ஆசிரியா் நியமனம் செய்வது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. வெகுவிரைவில் தீா்ப்பைப் பெற்று பணி நியமனம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தற்போது நீதிமன்ற உத்தரவுக்காகக் காத்திருக்கிறோம்.
சட்டப்பேரவை மானியக் கோரிக்கையின்போது பள்ளிக் கல்வித் துறையில் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் என்னென்ன என்பது குறித்து விரிவாக எடுத்துரைக்கப்படும்.
கடந்த 2011 முதல் 2021-ஆம் ஆண்டு வரை 10 ஆண்டுகளில் நகராமல் இருந்த பள்ளிக் கல்வித் துறையை கடந்த 3 ஆண்டுகளில் சிறப்பான துறையாக உருவாக்கி இருக்கிறோம். மத்திய அரசு வகுத்துள்ள 20 செயல்பாடுகளில் 18 செயல்பாடுகளில் முதலிடத்தில் உள்ளோம். எனவே, பள்ளிக் கல்வித் துறையில் என்னென்ன செய்துள்ளோம் என்பதைக் கணக்கீடு செய்து பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை கேள்விகளை எழுப்ப வேண்டும் என்றாா் அவா்.