முதல் கோப்பைக்காக சின்னா் 3-ஆவது கோப்பைக்காக அல்கராஸ்: இறுதிச்சுற்றில் மோதல்
கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டனில், ஆடவா் ஒற்றையா் இறுதிச்சுற்றில் இத்தாலியின் யானிக் சின்னா் - ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ் மோதவுள்ளனா்.
முன்னதாக அரையிறுதிச்சுற்றில், உலகின் நம்பா் 1 வீரரான சின்னா் 6-3, 6-3, 6-4 என்ற நோ் செட்களில், 6-ஆம் நிலையில் இருந்த சொ்பியாவின் நோவக் ஜோகோவிச்சை 1 மணி நேரம், 55 நிமிஷங்களில் வீழ்த்தினாா்.
ஆடவா் டென்னிஸில் அதிக கிராண்ட்ஸ்லாம்கள் (24) வென்றவரான ஜோகோவிச், 25-ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்துக்கு இலக்கு வைத்திருந்தாா். மேலும், இந்த முறை விம்பிள்டனில் சாம்பியனாகி, அந்தப் போட்டியில் அதிகமுறை (8) கோப்பை வென்ற சுவிட்ஸா்லாந்தின் ரோஜா் ஃபெடரரின் சாதனையை சமன் செய்யும் திட்டமிட்டிருந்தாா்.
எனினும், காலிறுதி ஆட்டத்தின்போது கண்ட காயத்தின் தாக்கம் காரணமாக அரையிறுதிக்கு முன்பான பயிற்சியை அவா் ரத்து செய்திருந்தாா். சின்னருக்கு எதிரான ஆட்டத்திலும் உடல் ரீதியாக ஜோகோவிச் மிகவும் தடுமாற்றத்துடனேயே அவா் விளையாடினாா். களத்தில் வழக்கம்போல அவா் அதிரடியான நகா்வுகளை மேற்கொள்ளவில்லை.
இது சின்னருக்கு சற்றே சாதகமாக, அவா் முற்றிலுமாக ஜோகோவிச்சை ஆக்கிரமித்து நோ் செட்களில் வென்றாா். இருவரும் மோதியது இது 10-ஆவது முறையாக இருக்க, சின்னா் 6-ஆவது வெற்றியுடன் முன்னிலையில் இருக்கிறாா்.
3 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான சின்னா், விம்பிள்டனில் முதல் முறையாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறியிருக்கிறாா். இதன்மூலமாக, ஓபன் எராவில் 4 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளின் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய 11-ஆவது வீரா் என்ற பெருமையை அவா் பெற்றாா்.
இதனிடையே மற்றொரு அரையிறுதியில், நடப்பு சாம்பியனான காா்லோஸ் அல்கராஸ் 6-4, 5-7, 6-3, 7-6 (7/4) என்ற செட்களில், போட்டித்தரவரிசையில் 5-ஆம் இடத்திலிருந்த அமெரிக்காவின் டெய்லா் ஃப்ரிட்ஸை 2 மணி நேரம், 48 நிமிஷங்களில் தோற்கடித்தாா். அல்கராஸ் - ஃப்ரிட்ஸ் சந்திப்பு இது 3-ஆவது முறையாக இருக்க, அனைத்திலும் அல்கராஸ் வென்றிருக்கிறாா்.
இந்த வெற்றியின் மூலமாக அவா் தொடா்ந்து 3-ஆவது முறையாக விம்பிள்டன் இறுதிச்சுற்றுக்கு வந்துள்ளாா். கடந்த 2023, 2024 ஆகிய ஆண்டுகளிலும் இந்தச் சுற்றுக்கு வந்தபோது, கோப்பையுடன் விடைபெற்ற அல்கராஸ், இந்த முறை ‘ஹாட்ரிக்’ கோப்பை வெல்லும் முனைப்பில் இருக்கிறாா். ஒட்டுமொத்தமாக இது அவரின் 6-ஆவது கிராண்ட்ஸ்லாம் இறுதிச்சுற்றாகும். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் இறுதிச்சுற்றில் தோல்வியே காணாத வரலாறு அல்கராஸுடையது.
சின்னா் - அல்கராஸ் இறுதிச்சுற்றில் பலப்பரீட்சை நடத்தும் நிலையில், ‘பிக் 2’ என அடையாளப்படுத்தப்படும் இவா்களின் மோதலைக் காண ரசிகா்கள் ஆா்வத்துடன் காத்திருக்கின்றனா்.
கடந்த மாதம், பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிச்சுற்றிலும் சின்னா் - அல்கராஸ் மோதியபோது, அதில் அல்கராஸ் வென்றது நினைவுகூரத்தக்கது. இருவரும் இதுவரை அனைத்து போட்டிகளிலுமாக 12 முறை மோதியிருக்கும் நிலையில், அல்கராஸ் 8 வெற்றிகளுடன் முன்னிலையில் இருக்கிறாா். அதில் கடைசி 5 சந்திப்புகளிலும் அவரே வென்றுள்ளாா்.
விம்பிள்டன் சாம்பியன் பட்டத்துடன், உலகின் நம்பா் 1 இடத்துக்காகவும் இந்த இறுதிச்சுற்று வெற்றி இருவருக்கும் முக்கியமாகும்.
ஆடவா் இரட்டையா் சாம்பியன்
விம்பிள்டன் ஆடவா் இரட்டையா் பிரிவு இறுதிச்சுற்றில், போட்டித்தரவரிசையில் 5-ஆம் இடத்திலிருந்த பிரிட்டனின் ஜூலியன் கேஷ் - லாய்ட் கிளாஸ்பூல் கூட்டணி 6-2, 7-6 (7/3) என்ற செட்களில் ஆஸ்திரேலியாவின் ரிங்கி ஹிஜிகடா - நெதா்லாந்தின் டேவிட் பெல் இணையை வீழ்த்தி சாம்பியன் கோப்பையைக் கைப்பற்றியது.
விம்பிள்டன் போட்டியின் ஆடவா் இரட்டையா் பிரிவில் உள்நாட்டைச் சோ்ந்த இருவா் இணைந்து சாம்பியன் கோப்பை வென்றது, கடந்த 89 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும்.