கோட்டா சீனிவாச ராவ் மறைவு: "அவர் உடல் ஒத்துழைச்சிருந்தா..." - டப்பிங் ஆர்டிஸ்ட் ராஜேந்திரன் உருக்கம்
பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார். அவருக்கு வயது 83. வயோதிகப் பிரச்னைகளால் கடந்த சில மாதங்களாக அவதிப்பட்டு வந்த நிலையில் நேற்று இரவு மறைந்தார்.
வில்லன், நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி என எல்லா மொழிகளிலும் சேர்த்து சுமார் 750 படங்களுக்கு மேல் நடித்திருக்கும் கோட்டா, ஆந்திர மாநிலம் கங்கிபேடு கிராமத்தில் பிறந்தவர்.
நடிப்புக்காக தெலுங்கில் ஒன்பது மாநில விருதுகளைப் பெற்ற இவருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருதையும் வழங்கி கௌரவித்தது.

நடிப்புக்கிடையே அரசியிலிலும் சில காலம் கவனம் செலுத்தினார். பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் விஜயவாடா கிழக்கு தொகுதியில் இருந்து ஒரு முறை சட்டசபைக்குத் தேர்வானார்.
தமிழில் சாமி, அரண்மனை, திருப்பாச்சி, கோ, காத்தாடி எனப் பல படங்களில் நடித்திருக்கும் கோட்டாவுக்குத் தமிழில் குரல் கொடுத்தது நடிகரும் டப்பிங் கலைஞருமான ராஜேந்திரன்.
கோட்டாவுடனான நினைவுகள் குறித்து ராஜேந்திரனிடம் பேசினோம்.
‘’முதல்ல சாமி படத்துக்குத்தான் பேசினேன். என் குரல் கச்சிதமா பொருந்தியதைத் தொடர்ந்து தமிழ்ல எல்லா படங்களுக்கும் என்னையே பேச வைக்கணும்னு கறாராச் சொல்லிட்டார். பார்க்க மனுஷன் கொஞ்சம் டெரரா தெரிஞ்சாலும் பழக இனிமையானவர்.
அவர் உடல்நிலை மட்டும் ஒத்துழைச்சிருந்தா தமிழ்ல நிறைய படங்கள் பண்ணியிருப்பார்.
அவருடைய பிறந்த நாள் ஜூலை பத்து. சில வருடங்களாகத் தொடர்ந்து பிறந்த நாள் அன்னிக்கு பேசிட்டிருந்தேன். உடல் நிலை சரியில்லாம போனதிலிருந்து பேச முடியலை.

அதே ஜூலை மாசத்துல பிறந்த நாளுக்கு ஒரு நாள் கழித்து மறைந்திருக்கார். பொண்ணுங்க ரெண்டு பேர். ஒரு பையன். அந்தப் பையனும் விபத்துல இறந்துட்டார். அப்ப இருந்தே மனுஷன் மனசளவுல உடைஞ்சிட்டார்.
இப்ப வேறென்ன சொல்றது. அவருடைய ஆத்மா சாந்தி அடைய வேண்டிக்கிறேன்’ என்கிறார் ராஜேந்திரன்.