பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்த ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமரா: ரயில்வே அதிரடி
திருப்பரங்குன்றம் குடமுழுக்கு: "மதுரை மாவட்டம் முழுவதும் விடுமுறை வேண்டும்" - ராஜன் செல்லப்பா
திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு விழாவிற்கு தூத்துக்குடி மாவட்டம் முழுக்க விடுமுறை அளிக்கப்பட்டது. அதேபோல திருப்பரங்குன்றம் குடமுழுக்கிற்கும் மதுரை மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என்று அதிமுக-வைச் சேர்ந்த திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா வலியுறுத்தியுள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய ராஜன் செல்லப்பா, "அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் ஆலயத்தில் வரும் 14 ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது.
கடந்த 2011 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் திருப்பரங்குன்றத்தில் குடமுழுக்கு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து தரப்பட்டன. அதனைத் தொடர்ந்து 14 ஆண்டுகள் கழித்து தற்போது குடமுழுக்கு நடைபெற உள்ளது.
இதுகுறித்து சட்டமன்றத்தில் சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும் நான் கூறியதற்கு முதலமைச்சர் அனுமதி பெற்று வழங்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார். ஆனால், இதுவரை ஒதுக்கப்படவில்லை. குடமுழுக்கிற்குத் தனியார் பங்களிப்புதான் அதிகமாக உள்ளது.

குடமுழுக்குப் பணிகள் குறித்து அமைச்சர்களின் ஆய்வுக்குப் பிறகு என்ன நடக்கிறது என்பது வெளிப்படையாகத் தெரியவில்லை. திருப்பரங்குன்றம் கோயிலுக்குப் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பொதுமக்கள் வருகிறார்கள். ஆனால், தமிழக அரசு மதுரை மாவட்டம் முழுக்க உள்ளூர் விடுமுறை அறிவிக்காமல் திருப்பரங்குன்றம் வட்டத்திற்கு மட்டும் விடுமுறை அளித்திருப்பது வேதனையாக உள்ளது.
திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு விழாவின்போது தூத்துக்குடி மாவட்டம் முழுக்க உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது. அதேபோல திருப்பரங்குன்றம் குடமுழுக்கிற்கும் மதுரை மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என்பதுதான் மக்களின் கோரிக்கையாகும்
திருச்செந்தூர் கோயில் குடமுழுக்குச் சிறப்பாக நடைபெறுவதற்கு என்னென்ன ஏற்பாடுகள் செய்தார்களோ அதே போன்று ஏற்பாடுகளும், உரியப் பாதுகாப்பும் மக்களுக்கு அளிக்க வேண்டும் என்பது எங்களது வேண்டுகோள்.
23 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் காசி விஸ்வநாதர் கோயிலுக்குச் செல்ல ரோப் கார் வசதி அமைய வேண்டும் என்று வைத்த கோரிக்கை என்ன நிலையில் உள்ளதென்று தற்போது வரை தெரியவில்லை. அதேபோல மல்டி கார் பார்க்கிங் அமைக்க நிதி ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம், அதுவும் நிறைவேற்றப்படவில்லை.
திருப்பரங்குன்றம் பகுதியில் தூய்மைப் பணியாளர்கள் மிகக் குறைவாக உள்ளனர். தமிழகம் முழுவதுமிருந்து குடமுழுக்கு விழாவிற்கு வரும் மக்கள் பிரச்னை இல்லாமல் தரிசிக்கக் கூடிய வகையில் உரிய வழிகாட்டு நெறிமுறைகளை நிர்வாகம் செய்ய வேண்டும்.
அவர்களுக்குத் தேவையான குடிநீர், கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளைச் செய்ய வேண்டும் அதேபோல வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளிட்ட பல்வேறு பணிகளையும் முறைப்படுத்த வேண்டும்" என்றார்