பிரதமரின் பயிற்சித் திட்டத்தில் அதியமான் கல்லூரி மாணவி தோ்வு
வேலூர்: சதுப்பேரியில் படகு சவாரி, இரண்டு செயற்கை தீவுகள்... வேலூரில் புதிய டூரிஸ்ட் பாயிண்ட்!
வேலூர் மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அமைந்திருக்கும் சதுப்பேரி ஏரியைச் சுற்றுலா தளமாக மாற்றும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
வேலூர் சேண்பாக்கம் பகுதிக்கு அருகில் அமைந்துள்ள சதுப்பேரியில் படகு சவாரியுடன் கூடிய இரண்டு செயற்கை தீவுகள் அமைத்து சுற்றுலா தளமாக மாற்றும் பணிகள் நீர்வளத்துறையின் சார்பில் ரூபாய் 19 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றன.
தற்போது வேலூர் கோட்டையும், அமிர்தி உயிரியல் பூங்காவும் தான் வேலூர் மாவட்டத்தில் உள்ள பிரபல சுற்றுலா தளங்களாக உள்ளன. இங்குதான் சுற்றுலாப் பயணிகளும், பொது மக்களும் தங்களுடைய விடுமுறை தினத்தில் சென்று வருகின்றனர்.
இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் புதிய சுற்றுலா தளம் அமைக்கப்பட வேண்டும் என்பது வேலூர் மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.
இந்நிலையில் சதுப்பேரி, கழிஞ்சூர் ஏரிகளைப் புனரமைத்து சுற்றுலா தளமாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.



இது குறித்து செயற்பொறியாளர் பாலாஜியிடம் கேட்டபொழுது, “250 ஹெக்டேர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இந்த சதுப்பேரியை ரூ.19 கோடி மதிப்பீட்டில் சுற்றுலாத் தளமாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, சதுப்பேரியில் இருந்து 6.5 மீட்டர் ஆழத்திற்கு வண்டல் மண் அகற்றப்பட்டு வருகிறது. மழைக்காலங்களில் கூடுதலாக மழைநீரைச் சேமிக்க ஏரியை ஆழப்படுத்தி வருகிறோம்.
ஏரியின் கரை ஓரங்களில் பொது மக்கள் நடைப்பயிற்சியை மேற்கொள்ள 1.5 கிமீ தூரத்திற்கு நடைபாதை அமைக்கப்பட உள்ளது. நடைபாதை இரண்டு புறங்களிலும் தடுப்பு கம்பிகள் நடப்பட உள்ளன.
நடைபாதை முழுவதும் மின் விளக்குகள் பொருத்தப்பட உள்ளன. சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்காக இரண்டு செயற்கை தீவுகள் சதுப்பெரியின் மையத்தில் அமைக்கப்பட்டு வருகின்றன. இங்கு மண் நிரப்பி அரிய வகை மரங்கள் நடப்பட உள்ளன.
தோட்டக்கலைத் துறை சார்பாக மரம், செடிகள் நட்டு ஏராளமான உள்ளூர் மற்றும் புலம் பெயரும் பறவைகளை ஏரிக்குள் ஈர்க்கும் திட்டம் வைத்து உள்ளோம்.



நீர்த்தேக்கத்தின் தெற்கு பகுதியில் குடியிருப்புகள் உள்ளதால் அங்குச் சிலர் ஏரியின் உள்ளே குப்பைகளை வீசி விட்டுச் செல்வதாகத் தகவல் கிடைத்து உள்ளது. எனவே அவற்றைத் தடுத்து ஏரியைப் பாதுகாக்க 1,700 மீட்டர் தூரத்திற்கு இரண்டு மீட்டர் உயர இரும்பு வேலி அமைக்கப்படும்.
மேலும் ஏரிக்கரையின் அருகிலேயே குழந்தைகள் விளையாடுவதற்கு விளையாட்டு பூங்காவும் அமைய உள்ளது. இந்தப் பணிகள் அனைத்தும் இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவு அடைந்து 2026 தொடக்கத்தில் இந்த சதுப்பேரி மக்கள் பயன்பாட்டிற்கு வரும்” என்றார்.