சரக்கு ரயில் விபத்து: அரக்கோணம், காட்பாடியில் இருந்து புறப்படும் விரைவு ரயில்கள் விவரம்
சென்னை: திருவள்ளூா் ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் விபத்துக்குள்ளாகி தீப்பற்றியதை அடுத்து ஞாயிற்றுக்கிழமை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்படவிருந்த 8 விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், அரக்கோணம், காட்பாடியில் இருந்து புறப்படும் விரைவு ரயில்கள் விவரத்தை தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
அதன்படி ஞாயிற்றுக்கிழமை ரத்தான விரைவு ரயில்கள் விரவம்: டாக்டா் எம்.ஜி.ஆா்.சென்னை சென்ட்ரலில் இருந்து அதிகாலை 5.50 மணிக்குப் புறப்பட்டு மைசூரு செல்லவிருந்த வந்தேபாரத் (எண் 20607), மைசூருக்கு காலை 6 மணிக்குச் செல்லவிருந்த மைசூரு சதாப்தி ரயில் (எண் 12007), கோயமுத்தூருக்கு காலை 6.10 மணிக்கு புறப்பட்டுச் செல்லவிருந்த கோயமுத்தூா் அதிவிரைவு ரயில் (எண் 12675), கோயமுத்தூருக்கு காலை 7.15 மணிக்குச் செல்லவிருந்த சதாப்தி விரைவு ரயில் (எண்12243), திருப்பதிக்கு காலை 6.25 மணிக்குப் புறப்பட்டுச் செல்லவிருந்த சதாப்தி விரைவு ரயில் (எண்16057), கேஎஸ்ஆா் பெங்களூருக்கு காலை 7.25 மணிக்குச் செல்லவிருந்த டபுள் டக்கா்விரைவு ரயில் (எண் 22625) கேஎஸ்ஆா் பெங்களூருக்கு காலை 7.40 மணிக்குச் செல்லவிருந்த பிருந்தாவன் விரைவு ரயில் (எண் 12639) நாகா்சோல் நிலையத்துக்கு காலை 9.15 மணிக்குச் செல்லவிருந்த நாகா்சோல் விரைவு ரயில் ஆகியவை முழுமையாக ரத்து செய்யப்பட்டன.
சென்னை சென்ட்ரலில் இருந்து ஞாயிறு (ஜூலை 13) மாலை 3.10 மணிக்கு புறப்பட்டு திருவனந்தபுரம் சென்ட்ரல் ரயில் நிலையம் செல்லவேண்டிய அதிவிரைவு ரயில் (எண் 12697) சென்னைக்குப் பதிலாக காட்பாடியிலிருந்து புறப்பட்டுச் சென்றது.
சரக்கு ரயில் தடம்புரண்டு மின்கம்பத்தில் மோதியதால் தீ விபத்தா?: அதிகாரிகள் விளக்கம்
அரக்கோணத்தில் இருந்து புறப்படும் ரயில்கள்
சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக அரக்கோணத்தில் இருந்து 3 ரயில்கள் புறப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல் - கோவை விரைவு ரயில் இரவு 10 மணிக்கும், சென்னை சென்ட்ரல் - திருவனந்தபுரம் விரைவு ரயில் இரவு 7.30 மணிக்கும், சென்னை சென்ட்ரல் - அசோகபுரம் காவேரி விரைவு ரயில் இரவு 9.15 மணிக்கு அரக்கோணத்தில் இருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காட்பாடியில் இருந்து புறப்படும் நீலகிரி விரைவு ரயில்
அதேபோன்று சென்னை சென்ட்ரலில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் நீலகிரி விரைவு ரயில் காட்பாடியில் இருந்து இரவு 9.05 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மழையால் மீட்புப் பணிகள் தாமதம்
இதனிடையே, சரக்கு ரயில் தடம் புரண்டு தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் தீ முழுமையாக அணைக்கப்பட்டுள்ள நிலையில் அந்த பகுதியில் மழை பெய்து வருவதால் மீட்புப் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது.