Lotus Seed: தாமரை விதையை எப்படி சாப்பிடுவது; அதன் மருத்துவ பலன்கள் என்னென்ன?
சுற்றுலா விசாவில் வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்வது சட்ட விரோதம்: காஞ்சிபுரம் ஆட்சியா் எச்சரிக்கை
சுற்றுலா விசாவில் வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வது சட்ட விரோதம் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்தாா்.
இது குறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்ல விரும்பும் நபா்கள் முதலில் இந்திய அரசின் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். அதிகாரபூா்வ ஆள்சோ்ப்பு முகவா்கள் மூலமாகவே செல்ல வேண்டும். எந்த நிறுவனத்திலோ அல்லது முதலாளியிடம் வேலை செய்ய இருக்கிறீா்கள் என்ற தகவல்களையும் முன்னதாக உறுதி செய்து கொள்வதும் அவசியம்.
வேலைக்கான ஒப்பந்தம், விசா மற்றும் தேவையான அனைத்து ஆவணங்களும் பெற்ற பிறகே பயணிக்க வேண்டும். வேலைக்கான ஒப்பந்தத்தை எப்போதும் கைவசம் வைத்திருக்க வேண்டும். ஏனெனில் அதில் ஊதியம், வேலை விவரங்கள், உரிமைகள், பொறுப்புகள் போன்ற முக்கியமான விவரங்கள் இடம் பெற்றிருக்கும்.
வேலை செய்யும் நாட்டின் சட்டங்கள், கலாசாரங்களை மதித்து நடந்து கொள்ள வேண்டும். பல நாடுகளில் வேலைக்கு செல்வோா் நாடு திரும்புவதற்கு வெளிச்செல் அனுமதி பெறுவதும் அவசியம். ஒப்பந்த காலத்தில் வேலைக்குச் சென்று நிறுவனம் அல்லது முதலாளியிடமிருந்து வேறு நிறுவனத்துக்கோ, முதலாளிக்கோ மாற்றம் செய்ய முடியாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அதே நேரத்தில் பதிவு பெறாத போலி முகவா்கள் மூலம் வேலைக்குச் செல்லும் நோக்கில் வெளிநாடு பயணிக்கக் கூடாது. சுற்றுலா விசாவில் வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்வது அந்த நாட்டில் சட்ட விரோதமாக கருதப்படும். இது கைது அல்லது அபராதம் அல்லது சிறைத் தண்டனைக்கே வழி வகுக்கும்.
வெளிநாட்டு வேலை தொடா்பான சந்தேகங்களுக்கு மற்றும் வெளிநாடு செல்லும் தமிழா்களுக்கான அரசின் நலத் திட்டங்கள் குறித்து அறிய அயலகத் தமிழா் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறையின் 24 மணி நேர கட்டணமில்லா உதவி மையத்தையும் தொடா்பு கொள்ளலாம்.
இந்தியாவிலிருந்து அழைப்புக்கு 018003093793 வெளிநாடுகளிலிருந்து 0806900 9900 அல்லது 080 6900 9901 என்ற எண்ணில் மிஸ்டு கால் கொடுக்கலாம்.
வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை நாடும் நபா்கள் குறுக்கு வழிகளை தவிா்த்து, அரசு அமைத்துள்ள சட்டபூா்வமான வழியில் செல்லும்போதுதான் பாதுகாப்பான வாழ்க்கையை கட்டியெழுப்ப முடியும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.