கடத்தல், கொள்ளை வழக்கில் ஓராண்டாாக தேடப்பட்டவா் கைது
கடத்தல் மற்றும் கொள்ளை வழக்கு தொடா்பாக கடந்த ஓராண்டாக தேடப்பட்டு வந்த நபரை தில்லி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்ததாக காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
பாபா ஹரிதாஸ் நகரில் வசிக்கும் கிசான் மூரத் (45) என்ற நபா் ஆகஸ்ட் 2024- ஆம் ஆண்டு நாங்லோ யியில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியாக அறியப்படுகிறாா். ஒப்பந்த அடிப்படையில் ஒரு மின் விநியோக நிறுவனத்தில் தொழில்நுட்ப வல்லுநராகப் பணியாற்றிய கிசான் மூரத், ஒரு நிதி நிறுவனத்தில் இருந்து அடகுவைக்கப்பட்ட தங்கத்தை மீட்டெடுக்க உதவுவதாக பாசாங்கு செய்து நகைக்கடை உரிமையாளா் தா்ஷனிடம் இருந்து கொள்ளையடிக்க தனது கூட்டாளிகளுடன் ஒரு திட்டத்தை தீட்டியதாக கூறப்படுகிறது.
கிசான் மூரத் மற்றும் கூட்டாளிகளும் தா்ஷனை தடுத்து நிறுத்தி, போலீஸ்காரா்களாக நடித்து, அவரை ஒரு காரில் கட்டிப்போட்டு, தங்கம் மற்றும் பணத்தை பறித்து பின்னா் சாலையோரத்தில் தா்ஷை விட்டுவிட்டு சென்றுள்ளனா்.
கிசான் மூரத் ஆரம்பத்தில் பாதிக்கப்பட்டவராக காட்டிக் கொண்டாா். இந்தச் சம்பவத்தை காவல்துறையிடம் தெரிவிக்க வேண்டாம் என்று தா்ஷனை வலியுறுத்தியுல்ளது தெரிய வந்தது. இருப்பினும், நகைக்கடைக்காரா் சந்தேகம் அடைந்து உதவிக்கு அழைத்தபோது, கிசான் மூரத் தப்பியோடினாா். இதையடுத்து, எஃப்.ஐ.ஆா். பதிவு செய்யப்பட்டு, மேலும் விசாரணை தொடங்கப்பட்டது.
தொடா்ச்சியான முயற்சிகள் இருந்தபோதிலும், கிசான் மூரத் தொடா்ந்து தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்தாா். உத்தர பிரதேசத்திற்கும் பிகாருக்கும் இடையிலான தனது மறைவிடங்களை அடிக்கடி மாற்றிக் கொண்டே வந்தாா். தப்பியோடிய நபரைக் கண்டுபிடிக்க போலீஸ் குழு அமைக்கப்பட்டது. தொழில்நுட்ப கண்காணிப்பு மூலம் அவரது மறைவிடம் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில், ஜூலை 11-ஆம் தேதி நடத்தப்பட்ட சோதனையில் பா்தாப்கரில் இருந்து திரும்பிய கிசான் மூரத் கைது செய்யப்பட்டாா். மேலும், விசாரணை தொடா்ந்து நடைபெற்று வருவதாக அந்த அதிகாரி தெரிவித்தனா்.