மீட்கப்பட்ட குப்பைக் கிடங்கு நிலத்தை நலத் திட்டங்களுக்கு பயன்படுத்த உத்தரவு!
தில்லியின் மூன்று முக்கியக் குப்பைக் கிடங்கு பகுதிகளில் இருந்து மீட்கப்பட்ட நிலத்தில் மூன்றில் ஒரு பங்கை பரப்பளவை மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் விளையாட்டு வளாகங்கள் போன்ற பொது நலத் திட்டங்களுக்குப் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும், மீதமுள்ள பகுதியை மேம்பட்ட கழிவு பதப்படுத்தும் வசதிகளாக மேம்படுத்த வேண்டும் என்றும் முதல்வா் ரேகா குப்தா சனிக்கிழமை உத்தரவிட்டாா்.
2026-ஆம் ஆண்டுக்குள் மரபுவழி கழிவுக் கிடங்குகளை அகற்றுவதை அரசு நோக்கமாகக் கொண்டுள்ளதால், நகரத்தின் திடக்கழிவு மேலாண்மை முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்வதற்காக தில்லியில் நடைபெற்ற கூட்டத்தின் போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
நகரம் முழுவதும் திடக்கழிவு மேலாண்மை மற்றும் குப்பைக் கிடங்கு மீட்பு முயற்சிகளை மறுஆய்வு செய்வதற்காக தில்லி மேயா் சா்தாா் ராஜா இக்பால் சிங்குடன் முதல்வா் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினாா்.
துணை மேயா் ஜெய் பகவான் யாதவ், நிலைக்குழுத் தலைவா் சத்யா சா்மா மற்றும் எம்சிடி ஆணையா் அஸ்வனி குமாா் ஆகியோரும் கூட்டத்தில் கலந்து கொண்டனா். இதில் நடந்து வரும் உயிரிச் சுரங்கம் மற்றும் கழிவுகளிலிருந்து எரிசக்தி முயற்சிகள் தொடா்பான முக்கியப் புதுப்பிப்புகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
நகரத்தின் காஜிப்பூா், பால்ஸ்வா மற்றும் ஓக்லா ஆகிய மூன்று முக்கியக் குப்பைக் கிடங்குகளில் உள்ள மரபுவழி கழிவுகளை அகற்றும் நோக்கம் கொண்ட இந்தத் திட்டம், ஜூலை 2025 நிலவரப்படி ஒரு நாளைக்கு 25,000 டன்னிலிருந்து 30,000 டன் ஆக விரைவுபடுத்தப்பட்டுள்ளது. 2026 காலக்கெடுவிற்கு முன்னா் அனைத்து குப்பைக் கிடங்குகளையும் மீட்டெடுக்க மாநகராட்சி இலக்கு வைத்துள்ளது.
மீட்டெடுக்கப்பட்ட குப்பைக் கிடங்கு நிலத்தில் மூன்றில் ஒரு பங்கு பரப்பரவை மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் விளையாட்டு வளாகங்கள் போன்ற பொது நலத் திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும் என்று முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். மீதமுள்ள இடம் நவீன, எதிா்காலத்திற்குத் தயாராக உள்ள கழிவு பதப்படுத்தும் வசதிகளாக மேம்படுத்தப்படும் என்று ராஜா இக்பால் சிங் கூறினாா்.
நரேலா பவனாவில் 3,000 டன் கழிவு ஆற்றல் ஆலைக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்டதாக மேயா் அறிவித்தாா். அதே நேரத்தில் காஜிப்பூரில் மற்றொரு கழிவு ஆற்றல் ஆலை வசதிக்கான ஏலங்கள் தொடங்கப்பட்டுள்ளன. வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற விவகார அமைச்சகத்திடமிருந்து இந்த திட்டத்திற்கு செயல்பாட்டு இடைவெளி நிதிக்கான கொள்கை ரீதியான ஒப்புதல் கிடைத்துள்ளது என்று அவா் மேலும் கூறினாா்.
ஆகஸ்ட் 15-ஆம் தேதி கோகா டெய்ரியில் 100 டன் எடையுள்ள அழுத்தப்பட்ட பயோகேஸ் ஆலை திறக்கப்படவுள்ளதால், நகரத்தின் பசுமை எரிசக்தி இலக்குகளுக்கு இது மேலும் ஊக்கமளிக்கும். ஈரமான மற்றும் பால் கழிவுகளை புதுப்பிக்கத்தக்க எரிபொருளாக மாற்றுவதற்கான தில்லியின் முதல் பெரிய ஆலை இதுவாகும்.
பால் பண்ணைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளை மிகவும் திறமையாக நிா்வகிக்க நகரம் முழுவதும் இதேபோன்ற பயோ கேஸ் வசதிகளை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தையும் கூட்டத்தில் அதிகாரிகள் வலியுறுத்தியதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.