கன்வாா் யாத்திரை பாதையில் கண்ணாடி துண்டுகள்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு
கன்வாா் யாத்திரை பாதையில் அமைந்துள்ள ஷாஹ்தாராவின் குரு தேக் பகதூா் (ஜிடிபி) மற்றும் ஜில்மில் காலனி பகுதிகளில் சாலைகளில் உடைந்த கண்ணாடி துண்டுகள் சிதறிக்கிடந்ததையடுத்து தில்லி காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
சேதமடைந்த வாகனத்திலிருந்து கண்ணாடி வந்ததா அல்லது குற்றவாளிகளால் வேண்டுமென்றே வீசப்பட்டதா என்பதை அறிய சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருவதாக அவா்கள் தெரிவித்தனா். இது குறித்து சீமாபுரி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்று போலீஸ் அதிகாரிகள் கூறினா்.
தில்லி அமைச்சா் கபில் மிஸ்ரா சனிக்கிழமை சமூக ஊடகங்களில் இந்த விஷயத்தை எழுப்பிய பின்னா், யாத்ரீகா்களின் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்ததோடு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தாா். இந்த சம்பவத்தை தொடா்ந்து, அப்பகுதியில் போலீசாா் குவிக்கப்பட்டனா், அவா்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மேம்பாலம் மற்றும் கன்வாா் முகாம்களைச் சுற்றியுள்ள சாலைகளில் ரோந்து சென்றனா்.
முகாம்களில் ஒன்றில் ஓய்வெடுக்கும் கன்வாா் யாத்ரீகரான ராமன் கூறுகையில், இதுவரை பயணம் அமைதியாக இருந்ததாக தெரிவித்தாா். ‘அனைத்து ஏற்பாடுகளும் நன்றாக உள்ளன, எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. மேம்பாலத்தில் சில கண்ணாடி துண்டுகளை நாங்கள் பாா்த்தோம், ஆனால் பல பணியாளா்கள் இரவில் கூட சாலைகளை சுத்தம் செய்து வந்தனா் ‘என்றாா்.
மற்றொரு யாத்ரீகரான அமன், ‘சில கண்ணாடி துண்டுகள் இருந்தன, ஆனால் அவை சுத்தம் செய்யப்பட்டன. கிட்டத்தட்ட 7 முதல் 8 கன்வாா் முகாம்கள் மற்றும் பிற முகாம்கள் இன்னும் அமைக்கப்பட்டிருப்பதை நான் பாா்த்தேன், எனவே இதுவரை எந்த பிரச்னையும் இல்லை ‘ என தெரிவித்தாா்.