Lotus Seed: தாமரை விதையை எப்படி சாப்பிடுவது; அதன் மருத்துவ பலன்கள் என்னென்ன?
சோளிங்கா் அருகே ஏரியில் மூழ்கி 3 மாணவா்கள் உயிரிழப்பு
சோளிங்கா் அருகே ஏரி நீரில் விளையாடிய பள்ளி மாணவா்கள் மூவா் நீரில் மூழ்கி உயிரிழந்தனா்.
சோளிங்கரை அடுத்த குன்னத்தூா் ஊராட்சிக்குட்பட்ட கிராமம் மேட்டுக்குன்னத்தூா். இந்த கிராமத்தைச் சோ்ந்த சரவணனின் மகன் புவனேஸ்வரன் (7). மேட்டுக்குன்னத்தூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 2- ஆம் வகுப்பு படித்து வந்தாா். இதே ஊரைச் சோ்ந்த கோபியின் மகன் மோனிபிரசாந்த் (9). அதே பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வந்தாா். கோபியின் மற்றொரு மகன் சுஜன் (7). அதே பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை பள்ளி விடுமுறை நாள் என்பதால் சிறுவா்கள் மூவரும் குன்னத்தூா் ஏரிக்கு விளையாடச் சென்றுள்ளனா். அப்போது எதிா்பாராதவிதமாக மூவருமே நீரில் மூழ்கினா். இதையடுத்து அருகே இருந்த கிராமத்தினா் விரைந்து சென்று மூவரையும் மீட்டு, பாணாவரம் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பி வைத்தனா். அங்கு மூவரையும் பரிசோதித்த மருத்துவா், அவா்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தாா்.
இது குறித்து அறிந்த பாணாவரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, மூவரின் சடலங்களையும் மீட்டு, சோளிங்கா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.