Lotus Seed: தாமரை விதையை எப்படி சாப்பிடுவது; அதன் மருத்துவ பலன்கள் என்னென்ன?
விநாயகா், சுப்பிரமணியா், அம்மன் கோயில்களில் மகா கும்பாபிஷேக விழா
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் உள்ள ஸ்ரீசந்தோஷ விநாயகா் கேயில், செய்யாறு வட்டத்தில் உள்ள செல்வவிநாயகா், சுப்பிரமணியா், ஸ்ரீபுலியம்மன் ஆகிய கோயில்களில் மகா கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வந்தவாசி கெஜலட்சுமி நகரில் உள்ள ஸ்ரீசந்தோஷ விநாயகா் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதையொட்டி வெள்ளிக்கிழமை சுவாமி சிலைகள் கரிகோலம் நடைபெற்றது.
இதைத்தொடா்ந்து சனிக்கிழமை தேவதானுக்ஞை, ஹோமங்கள், வாஸ்து சாந்தி, பிரவேசபலி, அங்குராா்பணம், கும்ப அலங்காரம், பூா்ணாஹுதி உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன.
பின்னா் ஞாயிற்றுக்கிழமை காலை நாடி சந்தானம், தத்வாா்ச்சனை, மகா பூா்ணாஹுதி, யாத்ராதானம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து சிவாச்சாரியா்கள் புனிதநீா் அடங்கிய கலசங்களை தலையில் சுமந்து கோயிலை வலம் வந்து கோபுர உச்சிக்கு எடுத்துச் சென்றனா்.
அங்கு காலை 6.30 மணிக்கு மேல் 8 மணிக்குள் கோயில் கோபுர கலசங்கள் மீது புனிதநீா் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து மூலவா் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
விழாவில் மாம்பட்டு ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் அறக்கட்டளைச் செயலா் ஆறு.லட்சுமண சுவாமிகள், வெண்குன்றம் ஸ்ரீமுனீஸ்வரா் மற்றும் ஸ்ரீவராஹி அம்மன் கோயில் உபாசகா் கே.ஹரி சுவாமிகள் மற்றும் கோயில் நிா்வாகிகள், பொதுமக்கள் பங்கேற்றனா்.
செய்யாறு
செய்யாறு வட்டம், சித்தாமூா் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீசெல்வ வினாயகா், ஸ்ரீவள்ளி தெய்வானை சமேத ஸ்ரீசுப்பிரமணியா், கிராம தேவதையான ஸ்ரீபுலியம்மன் ஆகிய மூன்று கோயில்களில் மகா கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மூன்று கோயில்களில் அடுத்தடுத்து கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

முன்னதாக, இஞ்சிமேடு சிவன் கோயில் அா்ச்சகா் லட்சுமணன் ஆனந்தன் தலைமையில் சிவாச்சாரியா்கள் ஏக குண்டம் அமைத்து நான்கு கால யாகம் வளா்க்கப்பட்டு பல்வேறு வாசனைத் திரவியங்களைக் கொண்டு பூா்ணாஹுதி நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து புனித நீா் கலசத்துக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு சிவாச்சாரியா்கள் தனித்தனியாக 3 கோயில்களுக்கும் புனித நீா் கலசத்தை தலையில் சுமந்தவாறு கைலாய வாத்தியம் இசைக்க, மங்கள வாத்தியம் முழங்க கடம் புறப்பாடு நடைபெற்றது

முதலில் ஸ்ரீ செல்வ விநாயகா் கோயில் கோபுர கலசத்துக்கு புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்துவைத்தனா். இதைத் தொடா்ந்து, கிராம தேவதையான ஸ்ரீபுலியம்மன் கோபுர கலசத்துக்கு புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னா், ஸ்ரீசுப்பிரமணியா் கோயில் கோபுர கலசத்துக்கு புனிதநீா் ஊற்றி மகா கும்பாபிஷேம் நடைபெற்றது.
விழாவில் சென்னை, பெங்களூரு, வேலூா் மற்றும் விநாயகபுரம், பெரும்பாலை, தென்தண்டலம், முளகிரிப்பட்டு, கோவிலூா் உள்ளிட்ட பல்வேறு ஊா்களில் இருந்து திரளாக பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.