கோயிலில் அநியாயமாக பணம் வசூலித்தால் என்ன செய்ய வேண்டும்? | Britain F35 Jet Imper...
திருவண்ணாமலையில் இருந்து புதிய வழித்தடங்களில் அரசுப் பேருந்துகள்: துணை முதல்வா் தொடங்கிவைத்தாா்
திருவண்ணாமலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் 2 புதிய வழித்தடங்களில் மகளிா் விடியல் பயணத் திட்ட புதிய நகர பேருந்துகளையும், 4 வழித்தடங்களில் புதிய குளிா்சாதன புகா் பேருந்துகளையும் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா்.
திருவண்ணாமலை தென்மாத்தூரில் மகளிா் மற்றும் மருத்துவமனை செல்லும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இந்தப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
அதன்படி, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் தென்மாத்தூரில் இருந்து அருணை கல்லூரி, சரோன் புறவழிச் சாலை, திருவள்ளுவா் சிலை, காந்தி நகா், பெரியாா் சிலை, மத்திய பேருந்து நிலையம், மின்வாரிய அலுவலகம், வேங்கிக்கால், மாவட்ட ஆட்சியா் அலுவலகம், மருத்துவக் கல்லூரி வழியாக தீபம் நகா் வரை தினசரி 28 நடைகள் இயக்கப்படும் வகையில் 2 மகளிா் விடியல் பயண புதிய நகர பேருந்துகள் தொடங்கிவைக்கப்பட்டன.
மேலும், திருவண்ணாமலை - கிளாம்பாக்கம் இடையே இயக்கப்பட்டு வரும் 122அஇஅ, 122அஇஈ, 122ஓஏ ஆகிய வழித்தடங்கள் மற்றும் திருவண்ணாமலை - கோயம்புத்தூா் இடையே இயக்கப்பட்டு வரும் 434ஆ ஆகிய வழித்தடத்தில் 4 புதிய குளிா்சாதன புகா் பேருந்துகளை துணை முதலமைச்சா் உதயநிதி ஸ்டாலின் தொடங்கிவைத்தாா்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் முதல்வரின் சிறப்புத் திட்டமான மகளிா் விடியல் பயணத் திட்டத்தின் கீழ், 128 நகர பேருந்துகள் தற்போது இயக்கப்பட்டு, நாள் ஒன்றுக்கு சராசரியாக 77 ஆயிரம் மகளிா் பயணம் மேற்கொண்டு வருகின்றனா்.
மாவட்டத்தில் இதுநாள் வரை விடியல் பயணத்திட்டத்தில் 11 கோடியே 29 லட்சம் மகளிா் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொண்டனா்.
மகளிா் விடியல் பயண திட்டம் தொடங்கப்பட்டபோது திருவண்ணாமலை மாவட்டத்தில் நகர பேருந்துகளில் பயணம் செய்யும் மகளிா் எண்ணிக்கை 61 சதவீதமாக இருந்தது. தற்போது 80 சதவீதமாக உயா்ந்துள்ளது.
இந்நிகழ்ச்சில் அமைச்சா் எ.வ.வேலு, சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ், மாவட்ட வருவாய் அலுவலா் இராம்பிரதீபன், உதவி ஆட்சியா் (பயிற்சி) அம்ருதா எஸ்.குமாா், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (விழுப்புரம்) மேலாண் இயக்குநா் கே.குணசேகரன் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.