Vijay: ஆர்ப்பாட்டத்துக்கு வரும் தவெக தொண்டர்களைக் கைது செய்கிறதா போலீஸ்? கொதிக்கும் நிர்வாகிகள்!
சிவகங்கையில் நடந்த காவல் மரணத்தைக் கண்டித்து தவெக சார்பில் இன்று, சென்னை, சிவானந்தம் சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது.
10 மணிக்குத் தொடங்கவிருக்கும் இந்த ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்கிறார்.
இந்நிலையில், ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு ஊர்களிலிருந்து கிளம்பிய தொண்டர்களை ஆங்காங்கே காவல்துறையினர் மறித்து வைத்திருப்பதாக நிர்வாகிகள் புகார் கூறுகின்றனர்.

தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் முதல் ஆர்ப்பாட்டம் என்பதால் இந்த ஆர்ப்பாட்டத்தைப் பிரமாண்டமாக நடத்த தவெகவினர் திட்டமிட்டிருந்தனர்.
குறைந்தபட்சமாக 20,000 நிர்வாகிகளைத் திரட்ட தவெக சார்பில் திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக கட்சி ரீதியாக உள்ள 120 மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
தென் மாவட்டங்களிலிருந்து நேற்று மாலையே நிர்வாகிகள் கிளம்பிவிட்டனர். இந்நிலையில், ஆர்ப்பாட்டத்துக்கு வரும் தொண்டர்களின் வாகனங்களை காவல்துறையினர் ஆங்காங்கே தடுத்து நிறுத்துவதாக நிர்வாகிகள் புகார் சொல்கின்றனர்.

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த மா.செ ஜாகீர் உசேன் நம்மிடம் பேசுகையில், '2 பஸ்களில் வந்தோம். வாகனத்தில் கொடி கட்டியிருப்பதைப் பார்த்து சென்னைக்குள் நுழையும்போதே காவலர்கள் தடுத்துவிட்டார்கள். நீண்ட வாக்குவாதத்துக்குப் பிறகுதான் எங்களை அனுமதித்தார்கள்.' என்றார்கள்.
கோவையைச் சேர்ந்த பாபு என்ற மா.செ பேசுகையில், 'குமாரபாளையத்திலேயே எங்களை மறித்தார்கள். வேனிலிருந்து இறங்கி ஆர்ப்பாட்டம் செய்த பிறகுதான் அனுமதித்தார்கள்.' என்றார்.

ஆர்ப்பாட்டத்துக்கு முன்பாக தொண்டர்களை ஒழுங்குபடுத்த மேடையேறிய பொதுச்செயலாளர் ஆனந்த், 'நம்முடைய தொண்டர்களை ஆங்காங்கே கைது செய்து வைத்திருக்கிறார்கள்' எனக் கூறினார்.
காஞ்சிபுரம், விழுப்புரம், ரெட் ஹில்ஸ் போன்ற பகுதிகளிலும் தவெகவினரின் வாகனத்தை காவல்துறை மறிப்பதாகப் புகார் சொல்கின்றனர்