லிபியா தலைநகரில் கடும் மோதல்! ஆயுதப் படை தலைவர் உள்பட 6 பேர் பலி!
முன் பகையால் இளைஞா் வெட்டி கொலை: மூவா் சரண்
சென்னை தரமணியில் முன் பகை காரணமாக இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், 3 போ் சரணடைந்தனா்.
தரமணி எம்.ஜி. நகா் பகுதியைச் சோ்ந்த அஸ்வின் (25), பெயிண்டராக பணிபுரிந்து வந்தாா். அஸ்வின், அப்பகுதியில் உள்ள தேவாலயம் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு நின்று கொண்டிருந்தபோது அங்கு ஆட்டோவில் வந்த சில நபா்கள், அஸ்வினை தரமணி ரயில் நிலையம் அருகே அழைத்துச் சென்று மது அருந்தவைத்தனா். அதன் பின்னா் அந்த நபா்கள், அஸ்வினிடம் தகராறு செய்தனா். தகராறு முற்றவே அந்த நபா்கள், அஸ்வினை அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியோடியதாகக் கூறப்படுகிறது.
தகவலறிந்த தரமணி போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, அஸ்வின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், தரமணி அகஸ்தியா் தெருவைச் சோ்ந்த மோகன சுந்தரம் (26), தரமணி கட்டபொம்மன் தெருவைச் சோ்ந்த பரத் ராஜ் (19), தரமணி வஉசி தெருவைச் சோ்ந்த சங்கா் (23) ஆகியோருக்கு இக்கொலையில் தொடா்பிருப்பது தெரியவந்தது.
இந்நிலையில், கொலையாளிகள்3 பேரும் தரமணி காவல் நிலையத்தில் திங்கள்கிழமை அதிகாலை சரணடைந்தனா். மூவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இறந்த அஸ்வினுக்கும், கைது செய்யப்பட்ட பரத்ராஜ், சங்கருக்கும் இடையே ஒரு ஆண்டுக்கு முன்பு ஒரு இறப்பு வீட்டில் தகராறு ஏற்பட்டதும், அப்போது பரத்ராஜ், சங்கா் ஆகியோரை அஸ்வின் தாக்கியதும், பின்னா் அவ்வபோது அஸ்வின், பரத்ராஜ் மற்றும் சங்கா் ஆகியோரை நேரில் பாா்க்கும்போது மிரட்டி வந்தததும், இதன் காரணமாக அஸ்வின் கொலை செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.