அமிர்தசரஸ் கள்ளச்சாராயம் விவகாரம்: 21 பேர் பலி! ரூ.10 லட்சம் இழப்பீடு அறிவிப்பு!
லிபியா தலைநகரில் கடும் மோதல்! ஆயுதப் படை தலைவர் உள்பட 6 பேர் பலி!
வட ஆப்பிரிக்க நாடான லிபியாவின் தலைநகர் திரிப்பொலியில் இரண்டு ஆயுதப் படைகளுக்கு இடையிலான மோதலில் 6 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
திரிப்பொலியில் நேற்று (மே 12) இரவு 9 மணியளவில் இரண்டு வெவ்வேறு ஆயுதக் குழுக்களுக்கு இடையில் கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது.
இதனால், அந்நகரத்தின் பல்வேறு இடங்களில் குழுக்களைச் சேர்ந்தவர்கள் பயங்கர ஆயுதங்களினால் தாக்கிக் கொண்டதாகவும், அங்கு இரவு முழுவதும் பயங்கர வெடிச் சத்தம் கேட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல்களில், திரிப்பொலி நகரத்தின் தெற்கு மாவட்டமான அபு சலிம்-ஐ தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஆயுதப்படையின் தலைவர் அப்தெல்கனி அல்-கிக்லி கொல்லப்பட்டதாக உள்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது.
திரிப்பொலியின் அபு சலிம் நகர ஆயுதப்படைக்கும் அந்நாட்டின் முக்கிய துறைமுக நகரமான மிஸ்ரதாவிலுள்ள ஆயுதப் படைக்கும் இடையிலான இந்த மோதலினால், மக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என அந்நாட்டு அதிகாரிகள் எச்சரித்திருந்தனர்.
சில மணி நேரம் தொடர்ந்த இந்தத் தாக்குதல்கள் அனைத்தும் தற்போது கட்டுப்பாட்டினுள் கொண்டு வரப்பட்ட நிலையில் சுமார் 6 பேர் கொல்லப்பட்டதாக லிபியா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, கடந்த 2011-ம் ஆண்டு நாட்டோ அமைப்பின் ஆதரவுப் பெற்ற படைகளினால் லிபியாவை பல ஆண்டுகளாக ஆண்டு வந்த முன்னாள் அதிபர் கடாஃபியின் ஆட்சிக் கவிழ்க்கப்பட்டது.
அதன் பின்னர் அந்நாடு இரண்டாகப் பிரிக்கப்பட்டு ஐ.நா. அங்கீகாரம் பெற்ற அரசு தலைநகர் திரிப்பொலியையும், அதன் எதிராளிப் படைகள் அந்நாட்டின் கிழக்குப் பகுதிகளையும் தங்களது கட்டுப்பாட்டின் கீழ் ஆட்சி செய்து வருகின்றன.
இந்நிலையில், இந்தத் தாக்குதல்களைத் தொடர்ந்து அமைதியை நிலைநாட்ட ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக திரிபோலி அரசு தெரிவித்துள்ளது.
மேலும், திரிப்பொலியின் பல்வேறு மாவட்டங்களிலுள்ள பள்ளிகள் அனைத்தும் அடுத்த அறிவிப்பு வரும் வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: சரக்கு விமானத்தில் பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் அனுப்பிய குற்றச்சாட்டு: சீனா மறுப்பு