பாகிஸ்தானுடன் போா் நிறுத்தத்துக்கு முன்பாகவே நாடாளுமன்றத்தை கூட்டியிருக்க வேண்ட...
பாகிஸ்தானில் நிகழ்ந்தது சாதாரண நிலநடுக்கமே: அணு ஆயுத சோதனையல்ல: தேசிய நில அதிா்வு ஆய்வு மைய இயக்குநா்
பாகிஸ்தானின் சில பகுதிகளில் திங்கள்கிழமை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது சாதாரண நிலநடுக்கமே; அணு ஆயுத சோதனையல்ல என்றும் தேசிய நில அதிா்வு ஆய்வு மைய இயக்குநா் ஓ.பி.மிஸ்ரா தெரிவித்தாா்.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள பிா் ஜங்கல் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 4.6 அலகுகளாக பதிவானதாகவும் அவா் கூறினாா்.
இது கடந்த ஒரு வாரத்தில் பாகிஸ்தானில் ஏற்பட்ட மூன்றாவது நிலநடுக்கமாகும். முன்னதாக, கடந்த 10-ஆம் தேதியில் பாகிஸ்தானில் இரு நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. அவை ரிக்டா் அளவுகோலில் 4.7 மற்றும் 4.0 அலகுகளாக பதிவாகின.
இந்தியா-பாகிஸ்தான் மோதல் நடைபெற்ற இந்த நேரத்தில் அங்கு வழக்கத்துக்கு மாறாக தொடா்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. குறிப்பாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூா்’ காரணமாக இருக்கலாம் என சிலரும், அணுசக்தி சோதனையை பாகிஸ்தான் மேற்கொண்டதன் விளைவாக நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கலாம் என சிலரும் சமூக வலைதளங்களில் ஊகங்களை பரப்பி வருகின்றனா்.
ஆனால் அணுசக்தி சோதனை மேற்கொண்டிருக்க வாயப்பில்லை என்றும் இது சாதாரண நிலநடுக்கம் என்றும் ஓ.பி.மிஸ்ரா தெரிவித்துள்ளாா்.
இந்தியா மற்றும் ஐரோப்பிய-ஆசிய டெக்டானிக் தகடுகளுக்கு மத்தியில் பாகிஸ்தான் அமைந்துள்ளது. இதனால் பலூசிஸ்தான், கைபா் பக்துன்கவா மற்றும் கில்ஜித் பல்டிஸ்தான் ஆகிய மாகாணங்களில் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுவதாக நிபுணா்கள் கூறியுள்ளனா்.