மியான்மர் நிலநடுக்கம்: இடிந்த தாய்லாந்து கட்டடத்தில் தேடுதல் பணிகள் நிறுத்தம்!
மியான்மர் நிலநடுக்கத்தினால் இடிந்த தாய்லாந்து நாட்டின் வானுயர கட்டடத்தின் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் பணிகள் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மியான்மர் நாட்டில் கடந்த மார்ச் 28 ஆம் தேதியன்று ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தினால் அந்நாட்டில் சுமார் 3,000-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். அந்நாட்டை மையமாக வைத்து நிகழ்ந்த இந்த நிலநடுக்கம் அண்டை நாடான தாய்லாந்தையும் பாதித்தது. அங்கு சுமார் 96 பேர் பலியாகினர்.
இதனால், தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில் கட்டப்பட்டு வந்த அரசுக்குச் சொந்தமான வானுயர கட்டடம் ஒன்று இடிந்து தரைமட்டமானது.
இந்த நிலநடுக்கத்தினால் பாங்காக்கில் பாதிக்கப்பட்ட ஒரே கட்டடமும் அதுதான் எனவும் அந்நாட்டில் பலியானவர்களில் பெரும்பாலானோர் இந்தக் கட்டடத்தின் இடிபாடுகளினுள் சிக்கியவர்களே எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு மேற்கொள்ளப்பட்ட தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளினால் சுமார் 89 பேரது உடல்கள் மீட்கப்பட்டது. மேலும், அப்பகுதியிலிருந்த 7 பேர் மாயமாகியுள்ள நிலையில் அவர்களைத் தேடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
எனவே, அங்கு கிடைத்த நூற்றுக்கணக்கான மனித உடற்பாகங்களைச் சோதனைச் செய்து மாயமானவர்களை அடையாளம் காணும் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவமானது அந்நாட்டில் கட்டப்படும் வானுயர கட்டடங்களின் பாதுகாப்புகள் குறித்து கேள்விகளை எழுப்பியது. இதனால், அந்தக் கட்டடத்தை கட்டும் பணியில் ஈடுபட்ட சீன நாட்டைச் சேர்ந்த ஒப்பந்ததார் மற்றும் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த அவரது மூன்று கூட்டாளிகள் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், அந்தக் கட்டடத்தில் பயன்படுத்தப்பட்ட சில இரும்புக் கம்பிகள் தரமற்றவை எனக் கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், இடிந்த கட்டடம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் பணிகள் அனைத்தும் நிறுத்தப்படுவதாக தாய்லாந்து அதிகாரிகள் இன்று (மே 13) அறிவித்துள்ளனர்.
இருப்பினும், கட்டடம் இடிந்த விவகாரத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அப்பகுதியில் ஆதாரங்கள் சேகரிக்கும் பணியானது இம்மாத (மே) இறுதி வரை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: லிபியா தலைநகரில் கடும் மோதல்! ஆயுதப் படை தலைவர் உள்பட 6 பேர் பலி!