Virat Kohli : "1.4 பில்லியன் இதயங்களை உடைத்த கோலி" - உச்சி முகரும் ஆஸ்திரேலிய ஊடகங்கள்!
இந்திய வீரர் விராட் கோலி, டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக நேற்று (மே 12) அறிவித்தார். கோலியின் இந்த திடீர் அறிவிப்பால் அதிர்ச்சியடைந்த ரசிகர்களும், கிரிக்கெட் வீரர்களும் அவருக்கு வாழ்வின் அடுத்தகட்ட பயணத்துக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மறுபக்கம், ஆஸ்திரேலிய ஊடகங்கள் கோலியின் டெஸ்ட் கிரிக்கெட் பயணத்தை அலாதியாக புகழ்ந்து எழுதி வருகின்றன.

சிட்னி மார்னிங் போஸ்ட்:
"கோலியின் அபார பேட்டிங் திறமை, களத்தில் ஆக்ரோஷம் ஆகியவற்றின் கலவை, ஆஸ்திரேலியர்களுக்கு தங்களின் சொந்த நாட்டு வீரர்கள் சிலரை நினைவுபடுத்தியது."
ABC (Australian Broadcasting Corporation):
"டெஸ்ட் கரியரில் 2014 முதல் 2021 வரை கோலி கேப்டனாகச் செயல்பட்ட காலம் நினைவுகூரப்படும். 68 போட்டிகளில் 40-ல் வெற்றிபெற்று இந்தியாவின் வெற்றிகரமான கேப்டன் ஆனார்.

உலக அளவில் டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டனாக அதிக வெற்றிகள் குவித்தவர்கள் பட்டியலில், தென்னாப்பிரிக்காவின் க்ரீம் ஸ்மித் (53 போட்டிகளில் வெற்றி), ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் (48 போட்டிகளில் வெற்றி), ஸ்டீவ் வாக் (41 போட்டிகளில் வெற்றி) ஆகியோருக்கு அடுத்த இடத்தில் நான்காவது இடத்தில் அதிக வெற்றிகளைப் பெற்றுள்ளார்."
news.com.au:
`ஓய்வு அறிவிப்பால் 1.4 பில்லியன் இதயங்களை உடைத்தார் கோலி'
"கோலி தனது கரியரில் பெரும்பாலும் இந்திய அணியின் மிடில் ஆர்டரில் நங்கூரமாக இருந்து வருகிறார். கோலி, ரோஹித் இருவரையும் ஒரேநேரத்தில் இழப்பது கிரிக்கெட்டுக்குப் பெரிய அடி."