அமிர்தசரஸ் கள்ளச்சாராயம் விவகாரம்: 21 பேர் பலி! ரூ.10 லட்சம் இழப்பீடு அறிவிப்பு!
ரோஹித், விராட்டின் ஓய்வு இங்கிலாந்துக்கு மிகவும் சாதகமானது: மொயின் அலி
டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் ஓய்வு பெற்றுள்ளது இங்கிலாந்துக்கு மிகவும் சாதகமானது என முன்னாள் இங்கிலாந்து வீரர் மொயின் அலி தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அடுத்த மாதம் விளையாடவுள்ள நிலையில், இவர்கள் ஓய்வை அறிவித்துள்ளது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
மொயின் அலி கூறுவதென்ன?
டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஓய்வை அறிவித்துள்ளது இங்கிலாந்து அணிக்கு மிகவும் சாதகமாக அமையும் என அந்த அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் மொயின் அலி தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுள்ளது கண்டிப்பாக இங்கிலாந்து அணிக்கு மிகவும் சாதகமாக இருக்கும் என நினைக்கிறேன். இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு சிறப்பாக விளையாடிய அனுபவம் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு இருக்கிறது. கடந்த முறை ரோஹித் சர்மா இங்கிலாந்தில் நன்றாக விளையாடியது எனக்கு நினைவிருக்கிறது.
இதையும் படிக்க: பயிற்சி ஆட்டங்களை விராட் கோலி ஒருபோதும் விரும்பியதில்லை: முன்னாள் இந்திய பயிற்சியாளர்
ரோஹித் சர்மா, விராட் கோலி இருவரும் இந்திய அணியைக் கேப்டனாக வழிநடத்தியுள்ளார்கள். அதனால், அவர்கள் இல்லாதது இந்திய அணிக்கு மிகப் பெரிய இழப்பே. டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்படுவார் என நினைக்கிறேன். ஜஸ்பிரித் பும்ராவை கேப்டனாக்க பிசிசிஐ நினைக்கலாம். ஏனெனில், அவர் மிகவும் சிறந்த கேப்டன். ஆனால், அவருக்கு அடிக்கடி காயம் ஏற்படுவது பிசிசிஐக்கு கவலையளிக்கும் விஷயமாக உள்ளது.
ஷுப்மன் கில் குஜராத் டைட்டன்ஸ் அணியைக் கேப்டனாக வழிநடத்தி வருகிறார். அதிக அனுபவம் இல்லையென்றாலும், அவருக்கு அணியை வழிநடத்தும் திறன் இருக்கிறது. அவர் கேப்டனாக நியமிக்கப்படும் பட்சத்தில், இங்கிலாந்து ஆடுகளங்களின் சவாலான தன்மைக்கு அவர் தயாராக இருக்க வேண்டும். இங்கிலாந்து சூழல்களில் முதல் முறையாக அணியை வழிநடத்தும் ஒருவர் மிகவும் அதிகமான சவால்களை சந்திக்க நேரிடும். இங்கிலாந்து அணி மிகவும் சவாலளிக்கும். இந்திய அணியின் திறமையை நான் குறைத்து மதிப்பிடவில்லை. அதிகப்படியான சவால்களுக்கு அவர்கள் தயாராக இருக்க வேண்டும் என்றார்.
இதையும் படிக்க: ஓய்வு அறிவிப்புக்குப் பிறகு பிரபல ஆன்மிக குருவை சந்தித்த விராட் கோலி!
இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர் வருகிற ஜூன் 20 ஆம் தேதி ஹெடிங்லேவில் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.