மும்பை படகு விபத்து குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் உதய் சமந்த்
நாக்பூர் (மகாராஷ்டிரம்): மும்பை கடற்கரையில் இந்திய கடற்படையின் அதிவேகப் படகு மோதியதில் 13 பேர் உயிரிழந்த விவகாரத்தில், முழுமையாக விசாரணை செய்து அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று வியாழக்கிழமை மகாராஷ்டிரம் மாநில அமைச்சர் உதய் சமந்த் கூறினார்.
‘நீல்கமல்’ எனும் சுற்றுலா பயணிகள் படகு 20 குழந்தைகள் உட்பட சுமார் 110 பயணிகள் மற்றும் 5 பணியாளா்களுடன் மும்பைக்கு அருகிலுள்ள பிரபல சுற்றுலாத் தளமான ‘எலிபெண்டா’ தீவுகளுக்கு சென்று கொண்டிருந்தது.
அப்போது, பயணிகள் படகு அருகே வட்டமிட்டு கொண்டிருந்த இந்திய கடற்படையைச் சோ்ந்து அதிவேகப் படகு கட்டுப்பாட்டை இழந்து, பயணிகள் படகின் மீது மோதியது. இதில் நீல்கமல் பயணிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் கடற்படை வீரா் ஒருவா் உள்பட 13 போ் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் 10 பேர் பொதுமக்கள், நான்கு பேர் கடற்படை வீரர்கள். படுகாயமடைந்த ஒருவர் கடற்படை கப்பல்துறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நடுக்கடலில் சிக்கித் தவித்தவர்களில் இதுவரை 101 போ் இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படையினரின் நடவடிக்கையால் மீட்கப்பட்டனா்.
11 கடற்படை படகுகள், மூன்று கடல்சாா் காவல் படகுகள், ஒரு கடலோர காவல்படை படகு மற்றும் நான்கு ஹெலிகாப்டா்கள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்றும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வரின் நிவாரண நிதியில் இருந்து ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் உறுதியளித்தார்.
இந்த நிலையில், மும்பை கடற்கரையில் இந்திய கடற்படையின் அதிவேகப் படகு மோதியதில் 13 பேர் உயிரிழந்த விவகாரத்தில், முழுமையான விசாரணையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வியாழக்கிழமை மகாராஷ்டிரம் மாநில அமைச்சர் உதய் சமந்த் கூறினார்.
இதையும் படிக்க |லாரி - ஆட்டோ ரிக்சா மோதியதில் 5 பேர் பலி, 5 பேர் காயம்
இதுகுறித்து செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவது:
“இதுபோன்ற விபத்துகள் மிகவும் வருத்தமளிக்கிறது. விபத்துக்கான காரணங்கள் குறித்து புதன்கிழமை முதல்வர் பேசினார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களை அரசு கவனித்துக்கொள்ளும். காயமடைந்தவர்களுக்கு அரசு உதவி செய்யும்.
இது விபத்துதான். மேலும் இது அரசியலாக்கக் கூடாது. ஏற்கனவே பல விதிகள் மற்றும் விதிமுறைகள் நடைமுறையில் இருந்தாலும், மனிதப் பிழை இருந்தால், அதையும் கவனித்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்," என்றார்.
மேலும் விபத்து குறித்து முழுமையாக விசாரணை நடத்தப்பட்டு, அதன்படி நடவடிக்கை எடுக்கப்படும். சில தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக இருந்தால் பரவாயில்லை, ஆனால் ஆர்வகோளாறில் யாராவது வேகமாக படகை ஓட்டியிருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று சமந்த் கூறினார்.
காணாமல் போனவர்களை தேடும் பணியில் இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.