Rain Alert: கனமழை காரணமாக எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விட...
மும்பை: 1200 அடி பள்ளத்தாக்கில் பிணமாகக் கிடந்த பெங்களூரு பேராசிரியர்; தீவிர விசாரணையில் போலீஸ்
பெங்களூருவில் பேராசிரியராக இருந்தவர் சண்முக பால சுப்ரமணியம் (58). இவர் சிறந்த பேச்சாளர் ஆவார். நாடு முழுவதும் தனியார் நிறுவனங்கள் தங்களது தொழிலாளர்களுக்காக நடத்தும் கருத்தரங்குகளில் பேச்சாளராக இவரை அழைத்துப் பேச வைப்பது வழக்கம்.
மும்பையில் அது போன்ற ஒரு நிகழ்ச்சியில் பேசுவதற்காக பாலசுப்ரமணியம் வந்திருந்தார். அவர் மும்பையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கி இருந்தார். ஆனால் கம்பெனி சார்பாக ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் உரையாற்ற பாலசுப்ரமணியம் செல்லவில்லை. இதையடுத்து அவர் எங்கே சென்றார் என்று அவரை மும்பைக்கு வரவழைத்த கம்பெனி விசாரிக்க ஆரம்பித்தது.
அவர் தங்கி இருந்த ஹோட்டலில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது அவர் ஹோட்டலில் இருந்து கிளம்பி சென்றது பதிவாகி இருந்தது. இதையடுத்து அவரைப் பற்றி போலீஸில் புகார் செய்யப்பட்டது.

போலீஸார் சோசியல் மீடியா மூலம் அவரைப் பற்றி தகவல் கொடுத்து அவர் குறித்த தகவல்களைச் சேகரித்தனர். அதோடு அவரது மொபைல் போன் சிக்னல் மூலம் அவர் எங்கே இருக்கிறார் என்பது குறித்து ஆய்வு செய்தபோது மும்பையில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மாதேரான் மலைப்பகுதியில் அவரது மொபைல் போன் சிக்னல் காட்டியது.
அதோடு பாலசுப்ரமணியம் குடும்பத்திற்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அவர்களும் உடனே மும்பைக்கு வந்தனர். போலீஸாரும், பாலசுப்ரமணியம் குடும்பத்தினரும் மாதேரான் மலைப்பகுதிக்குச் சென்று தேட ஆரம்பித்தனர். அவரது உடல் மலை பள்ளத்தாக்கில் 1200 அடியில் கிடப்பதை உள்ளூர் பழங்குடியினர் பார்த்து போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார் உடனே லோனவாலாவில் இருந்து மலையேற்ற குழுவினரை வரவழைத்து கயிறு கட்டி அவரது உடலை மேலே கொண்டு வந்து பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவர் கீழே விழுந்தபோது உடம்பில் பல இடங்களில் காயம் ஏற்பட்டு இருந்தது. அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது மலையில் ஏறும்போது கால் தவறி கீழே விழுந்தாரா என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
அவர் அப்பகுதிக்கு வரும்போது அவரை யாராவது பார்த்தார்களா என்பது குறித்து விசாரித்து வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.