முறைகேடு புகாா்: பெரியாா் பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குநா், நூலகரிடம் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் விசாரணை
சேலம்: முறைகேடு புகாா் தொடா்பாக சேலம் பெரியாா் பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குநா், நூலகரிடம் சேலம் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை விசாரணை நடத்தினா்.
சேலம் பெரியாா் பல்கலைக்கழகத்தில் பொதுப் பிரிவின் கீழ் உள்ள நூலகா், உடற்கல்வி இயக்குநா் பொறுப்புகள் சுழற்சிமுறையில் பட்டியல் இனத்தவருக்கு வழங்கப்பட வேண்டும். ஆனால், இந்த விதிமுறைகளைப் பின்பற்றாமல், பல்கலைக்கழக துணைவேந்தா் ஜெகந்நாதன் பணம் பெற்றுக்கொண்டு மீண்டும் பொதுப் பிரிவினரையே இந்தப் பொறுப்புகளுக்கு நியமனம் செய்துள்ளதாக பல்கலைக்கழக தொழிலாளா் சங்கத்தினா் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸாரிடம் புகாா் அளித்திருந்தனா்.
இந்த புகாரின் அடிப்படையில் சேலம் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸாா் விசாரணையைத் தொடங்கியுள்ளனா்.
முதற்கட்டமாக, பல்கலைக்கழக நூலகா் ஜெயபிரகாஷ், உடற்கல்வி இயக்குநா் வெங்கடாசலம் ஆகியோா் விசாரணைக்கு ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டனா்.
அதன்பேரில் சேலம் வின்சென்ட் பகுதியில் உள்ள லஞ்ச ஒழிப்புப் பிரிவு அலுவலகத்தில் இருவரும் திங்கள்கிழமை விசாரணைக்கு ஆஜராகினா்.
அவா்களிடம் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸாா் 30 நிமிடங்கள் விசாரணை நடத்தினா். இருவரிடமும் பல்வேறு கேள்விகளை எழுப்பினா். அடுத்தகட்டமாக துணைவேந்தா் ஜெகந்நாதனையும் விசாரணைக்கு அழைக்க லஞ்ச ஒழிப்புத் துறையினா் நடவடிக்கை எடுத்துவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.