குட்டி சிம்பன்சிக்கு ரீல்ஸ் காட்டத் தடை- பூங்காவின் விநோத அறிவிப்பு; பின்னணி என்...
முழு நிலவு வெளிச்சத்தில் போர் கதைகள்! - லே முதல் கார்கில் வரை | திசையெல்லாம் பனி- 12
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
இன்றைய பயணத்தை வழிநடத்தப்போவது புதிய கேப்டன். வெகு நிச்சயமாக யாரும் இன்னும் எழுந்திருக்கக்கூட மாட்டார்கள் என்பதையும் அறிந்திருந்தோம். ஆனால் இவை எதுவும் எங்களது வழக்கத்தை மாற்றப் போவதில்லை. அனைவருக்கும் முன்னரே தயாராகி லே நகரச் சாலைகளில் நடந்துவிட்டு வந்தோம். இரவு நேரங்களில் ஜொலிஜொலித்துக் கொண்டிருந்த வீதிகள் இப்போது காலியாகக் கிடந்தன.
நாங்கள் வரவேற்பறையில் இருந்தபோது சஷாங்க் வந்தார். எங்களைப் பார்த்ததும்,
‘நீங்கள் இங்கிருக்கிறீர்களா, சொன்னபடியே உங்களைத் தேடி வந்துவிட்டேன் பார்த்தீர்களா’ என அருகில் வந்து அமர்ந்தார்.
முந்தைய இரவு வெகு நேரம் பேச்சு சத்தம் கேட்டுக்கொண்டிருந்ததைப் பற்றிக்கேட்டோம்.
‘என் கண்கள் சிவந்திருப்பதை நீங்கள் பார்த்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் கண்ணாடியை அணிந்து வந்திருக்கிறேன்’ என்றார்.

‘உங்களுக்குப் பரிசு கொண்டுவந்திருக்கிறேன்’ என்று ஓர் உறையைத் தந்தார். அதில் சில புகைப்படங்கள் இருந்தன. அத்தனையும் அவர் எடுத்த படங்கள்தாம். படங்களுக்குப் பின்பகுதியில், வாழ்கை சார்ந்த அனுபவ வரிகளை அவரே எழுதிச் சேர்த்திருந்தார். யுவர் ஸ்டோரி என்று அதற்குப் பெயரிட்டிருந்தார்.
அவர் செல்லும் இடங்களில் சந்திக்கும் நண்பர்களிடம் அவர் எடுக்கும் படங்களை ஒரு செய்தியோடு கொடுப்பது அவரது வழக்கமென்றும், காஷ்மீர் - கன்னியாகுமரி பயணத்தில் இதைச் செய்ததாகவும் கூறினார்.
‘இது உங்களுக்காக. நான் இன்ஸ்டாகிராம், யு டியூபில் இருக்கிறேன். என்னை அதில் பின்தொடருங்கள். நாம் இணைந்திருப்போம்’ என்றார். நாங்கள் அப்படங்களைப் பெற்றுக்கொண்டோம்.
அதன்பிறகு எங்களுக்காக ஒரு பாட்டையும் பாடினார். அது என்னவென்று புரியவில்லை ஆனால் கேட்பதற்கு நன்றாக இருந்தது. இப்போது அணியினர் தயாராகி வரத்தொடங்கியிருந்தனர். அவர்களிடம் சென்று சஷாங்க் பேசிக்கொண்டிருந்தார்.
நான் தேநீர்க் கோப்பையை எடுக்கப்போனபோது அருகில் ஆஷிஷ் நின்றிருந்தார். எங்களது புதிய கேப்டன். பார்த்ததும் சம்பிரதாயமாகச் சிரித்துவிட்டு அவரை கடந்துவந்தேன். ப்ரீத்தி அப்போதுதான் கீழிறங்கி வந்தாள். அவளிடம் நான் வாங்கி வந்த பரிசைக் கொடுத்தேன். மறுநொடியே தன் கழுத்தில் இருந்த சங்கிலியைக் கழட்டி விட்டு இதை அணிந்துகொண்டதோடு, பாய்ந்து வந்து என்னைக் கட்டிக்கொண்டாள். இருவருக்குமே அது நெகிழ்ச்சியான தருணமாக இருந்தது. எப்போதும் தொடர்பில் இருக்கவேண்டுமென உறுதியும் எடுத்துக்கொண்டோம்.
அவளைப் போய் சாப்பிடச்சொல்லிவிட்டு, எங்களுடைய வேன் வந்துவிட்டதா என்பதைப் பார்க்க விடுதியின் முன்புறம் வந்தேன். மிகவும் பொறுமையாக எல்லோரும் தயாராகிக் கொண்டிருந்தனர். புதிய கேப்டன் மட்டும் பதற்றத்துடன் அனைவரையும் கிளம்பும்படி சொல்லிக்கொண்டிருந்தார். நாங்கள் இருவரும் இதை ஓரமாக நின்று கவனித்துக்கொண்டிருந்தோம். சஷாங்க் இப்படிச் செய்யவேமாட்டார். குழுவினரின் தன்மையை மிகச்சரியாக அளந்துவைத்திருப்பார். ஒன்பது மணிக்குக் கிளம்பவேண்டும் என்றால், அவர் எங்களிடம் எட்டு மணி எனச் சொல்லிவைப்பார். அப்போதுதான் அனைவரும் ஆடியசைந்து வருவதற்குச் சரியாக இருக்கும். கால தாமதமும் ஆகாது.
இது தெரியாமல் அணியினரைச் சமாளிக்க அவர் திணறிக்கொண்டிருந்தார். இதைப் பார்த்து ஒரு பக்கம் எங்களுக்குச் சிரிப்பு வந்தாலும், வருத்தமாகவும் இருந்தது. அவரது மன ஆறுதலுக்காக நாங்கள் இருவர் மட்டும் தயாராகி அவர் முன் நின்றோம். எப்படியோ அனைவரையும் கிளப்பி அவரவர் பைக்குகளை எடுக்கச் செய்தார்.

சஷாங்க் ஹோட்டல் வாசலில் அனைவரையும் வழியனுப்ப வந்திருந்தார். எங்கள் பைக்குகள் ஒவ்வொன்றாக வாசலைக் கடந்தன. பயணத்தைத் தொடங்கிய நாளன்று ஒவ்வொருவருக்கும் தனியே வாழ்த்து சொன்னதைப் போலவே இம்முறையும் செய்தார்.
எங்களது பயணத்தின் இறுதிக்கட்டம் தொடங்கியது அந்தப் புள்ளியில்தான். லேவில் இருந்து கிளம்பி கார்கில் சென்றடைவதுதான் இன்றைய திட்டம். முதலில் நிறுத்தப்போவது ஒரு குருத்துவாராவில். அதற்கடுத்து சங்கம் பாய்ண்ட். அது இண்டஸ் (சிந்து நதி), சன்ஸ்கர் நதிகள் ஒன்றாகச் சங்கமிக்கும் இடம். மரகதப் பச்சை வண்ணம் கொண்ட சிந்து நதியும், டார்கைஸ் நீலத்தில் சன்ஸ்கர் நதியும் தனித்ததியே பாய்ந்துவந்து ஒன்றாகக் கலப்பதை லே நகரிலிருந்து 35 கிலோமீட்டர்கள் தள்ளியிருக்கும் இடத்தில் காணலாம். ஆனால் நாங்கள் சென்றபோது சன்ஸ்கர் ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு, சாம்பல் நிறத்தில் அந்நதி தென்பட்டது.
திபெத்தில் இருக்கும் கைலாச மலையிலிருந்து உருவாகும் சிந்து நதி, ஆசியாவின் மிக நீளமான நதிகளில் ஒன்று. சிந்து நாகரீகத்தின் ஆதாரம். லடாக்கின் உட்பிரதேசங்களில் இருந்து உற்பத்தியாகும் சன்ஸ்கர், சன்ஸ்கர் பள்ளத்தாக்கின் வழியே பாய்ந்துவந்து சிந்து நதியுடன் கலக்கும்.
ஜூன் முதல் செப்டம்பர் மாதங்களில் இரு நதிகளும் முழு விசையில் பாயும். இரண்டும் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டு கலப்பதை அப்போது காணலாம். இரு வண்ணங்களும் ஒன்றிணைவதைப் படமெடுக்க அப்போது பெருங்கூட்டம் கூடும். குளிர் காலங்களில் சன்ஸ்கர் நதி உறைந்துவிடும். சிந்துவில் மட்டும் ஓரளவு நீர்வரத்து இருக்கும். இந்த நதிகளின் சங்கமம் அப்பகுதியின் வாழ்வாதாரத்தைச் செழுமை படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கின்றன.

குளிர் காலங்களில் நதி உறையும் போது, நதியின் மீது நடந்து கடக்கும் ‘chadar trek’ நடைபெறும், மற்ற மாதங்களில் ராப்டிங் எனப்படும் சறுக்குப் படகுப் பயணம் அங்கே பிரபலம். அங்கிருந்து கிளம்பி நாங்கள் அடுத்துச் சென்றது மேக்னெட்டிக் ஹில் என்று ஓர் இடம். அங்கு நம் வண்டியை நிறுத்திவிட்டுப் பார்த்தால், வாகனங்கள் பின்னோக்கி நகர்வதைப் போலத் தோன்றும். அது காட்சி மயக்கத்தால் ஏற்படுவது.
லே நகரைக் கடக்கும் போது, அங்கிருக்கும் ராணுவ முகாம்களைக் கடந்துதான் செல்ல வேண்டும். பத்து இருபது கிலோமீட்டர்களுக்கு சீரான தார்ச் சாலை, கண்ணை மூடிக்கொண்டு அப்படியே வண்டியைச் செலுத்தலாம் அப்படியொரு நேரான பாதை. சுற்றிலும் மலைகள், வறண்ட பூமி. இரண்டு பக்கமும் ராணுவ முகாம்கள். நேரான பாதை என்பதால், எங்கள் குழுவினருடைய முழு வரிசையையும் பார்க்கமுடிந்தது. இப்படி அனைவரும் சீரான வேகத்தோடு போகமாட்டார்களே என்று கவனித்தபோதுதான் தெரிந்தது, புது கேப்டன் வேகம் எடுக்கவில்லை என்று.
அவர் குழுவினர் அனைவரது பைக்குகளும் ஒன்றாக வரவேண்டும் என்று முடிவாக இருந்தார். அதனால் வேகம் எடுக்கவில்லை. அவர்தான் முன்னால் செல்லவேண்டும் என்பதால் பின்னால் இருப்பவர்களும் வேகத்தை அதிகப்படுத்தமுடியாது. இப்படியே ஒவ்வொருவராக மொத்தக் குழுவும் மெதுவாகப் போகும்படியானது. வளைவுகளில் திரும்பும் போது ஒன்று போல அனைவரும் திரும்புவதும், பின்பு நேராகப் போவதையும் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தேன்.
மதிய உணவு நிறுத்தத்தின்போது அணியின் வேக விரும்பிகள் பார்த்தைச் சூழ்ந்துகொண்டனர். கேப்டனை கொஞ்சம் வேகமாகப் போகச் சொல்லுங்கள், இந்த வேகத்தில் சென்றால் எங்களுக்குத் தூக்கம் வந்துவிடுமெனப் பேசிக்கொண்டிருந்தனர். செய்தி கேப்டனுக்கும் பகிரப்பட்டது. அவரும் சற்றே வேகமெடுத்தார், ஆனால் அணியினருக்கு அது போதுமானதாக இருக்கவில்லை. ஓரிடத்தில் கேப்டனின் பைக்கையே முந்திக்கொண்டு இவர்கள் சென்றுவிட்டனர். அது வந்திருந்த புதிய கேப்டனுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது. ஆனால் அவர் பெரிதாக எதையும் சொல்லிக்கொள்ளவில்லை.
மாலையில் கார்கில் நகரை அடைந்தோம். நகரின் மத்தியில் இருந்தது எங்களின் அன்றைய தங்குமிடம். முதல் மாடியில் எங்களுக்கான அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தது. இரண்டாம் தளத்தில் எங்களைப் போலவே பைக் பயணம் வந்திருந்தவர்கள் தங்கியிருந்தனர்.

அன்று பௌர்ணமி. முழு நிலவு அன்று சற்றே பெரியதாகத் தெரிந்தது. கர்நாடகாவிலிருந்து வந்த கூட்டமொன்று பால்கனியில் சில பாடல்களை ஒலிக்கவிட்டுக் கேட்டுக்கொண்டிருந்தனர்.
அன்றைய அணி சந்திப்பு சம்பிரதாயமான ஒன்றாக அமைந்தது. அந்த கேப்டனுக்கு ஹிந்தி மட்டுமே தெரியும். ஆதலால் பார்த் உடன் நின்று எங்களுக்காக மொழி பெயர்த்துக் கொண்டிருந்தார். காலையிலிருந்தே வேகத்தைக் கூட்டவேண்டுமென்று அணியினர் கேட்டிருந்தனர். அப்போதும் அதையே பேசினர். கேப்டன் தன்னுடைய கருத்துகளை முன்வைக்க முயன்றார். குழுவினரின் பாதுகாப்பு என்னுடைய பொறுப்பு, அதில் நான் சமரசம் செய்துகொள்ள முடியாது என்பது அவரது வாதமாக இருந்தது. அதில் மற்றவர்கள் உடன்படவில்லை. இருப்பினும் அணியினருடன் இணைந்து பயணத்தை நல்லபடியாக அமைக்கவேண்டும் என்பது அவரது விருப்பம் எனத் தெரிவித்தார்.
அவருடைய எண்ணம் எல்லாம் சரியாகத்தான் இருந்தது. ஆனால் இரண்டு நாள்களில், அதுவும் பயணம் முடியப்போகும் சமயத்தில், ஏற்கெனவே பழக்கப்பட்ட ஓர் அணியைக் கட்டுப்படுத்துவது கடினம் என்றே தோன்றியது. இன்னும் ஒரே ஒரு நாள் பயணம்தான், அதன்பிறகு அவரவர் இடத்திற்குத் திரும்பவேண்டும். அதற்குள் ஏன் ஒருவருக்கொருவர் முறைத்துக்கொள்ளவேண்டும் என அரைகுறை மனத்தோடு கேப்டனும் அணியினரும் அடுத்த நாளுக்கான திட்டங்களை ஒப்புக்கொண்டனர்.
அதன்பின் அங்கிருந்த மற்ற பயணக்குழுவுடன் இணைந்து எங்களது பயண அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டோம். அன்றைக்கு கார்கில் போர் நினைவகத்திற்குச் சென்று வந்திருந்த அணியைச் சேர்ந்த ஒருவர், அங்கே தான் பார்த்தவற்றைக் குறித்துப் பேசினார். இந்தியா- பாகிஸ்தான் போரில் நிகழ்ந்தவற்றையும் நன்கு அறிந்து வைத்திருந்தார்.
பத்தாயிரம் அடி உயரத்தில் டாங்கர்களை கொண்டு நிறுத்திப் போரிட்ட இந்திய வீரர்களைப் பற்றித் தெரியுமா என அவர் கேட்டதுமே, அங்கிருந்த மொத்தப் பேரும் அருகருகே அமர்ந்து அவர் பேசுவதைக் கேட்கத் தொடங்கினர். இப்போது பாடல்கள் ஒலிப்பது நின்றுபோயிருந்தது. அந்த முழு நிலவு வெளிச்சத்தில் அந்த நிலத்தின் கதையை அவர் சொல்லத் தொடங்கினார்.
(தொடரும்)

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!