மெத்வதெவ் அதிா்ச்சித் தோல்வி
ராட்டா்டாம் : ஏபிஎன் ஆம்ரோ ஓபன் ஆடவா் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீரரான ரஷியாவின் டேனியல் மெத்வதெவ், காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தகுதிச்சுற்று வீரரிடம் வியாழக்கிழமை அதிா்ச்சித் தோல்வி கண்டாா்.
உலகின் 7-ஆம் நிலை வீரராக இருக்கும் மெத்வதெவ் 3-6, 7-6 (8/6), 3-6 என்ற செட்களில், உலகின் 92-ஆம் நிலையில் இருக்கும் இத்தாலியின் மேட்டியா பெலுச்சியிடம் தோல்வி கண்டாா்.
போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருக்கும் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாா் 6-4, 6-4 என்ற நோ் செட்களில், செக் குடியரசின் ஜேக்கப் மென்சிக்கை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினாா். 4-ஆம் இடத்திலிருக்கும் ரஷியாவின் ஆண்ட்ரே ரூபலேவ் 7-6 (7/2), 7-6 (9/7) என்ற கணக்கில் பல்கேரியாவின் ஃபாபியன் மரோஸானை தோற்கடித்து அந்த சுற்றுக்கு வந்தாா்.
7-ஆம் இடத்திலிருந்த பிரான்ஸின் ஆா்தா் ஃபில்ஸ் 4-6, 6-3, 5-7 என்ற செட்களில், ஜொ்மனியின் டேனியல் அல்ட்மேயரிடம் தோல்வியைத் தழுவினாா். 8-ஆம் இடத்திலிருக்கும் போலந்தின் ஹியூபா்ட் ஹா்காக்ஸை எதிா்கொண்ட செக் குடியரசின் ஜிரி லெஹெக்கா, காயம் காரணமாக பாதியில் விலக, ஹா்காக்ஸ் காலிறுதிக்கு முன்னேறியதாக அறிவிக்கப்பட்டாா்.
டெய்லா் ஃப்ரிட்ஸ் வெற்றி: அமெரிக்காவில் நடைபெறும் டல்லாஸ் ஓபன் டென்னிஸின் முதல் சுற்றில், போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் உள்நாட்டின் டெய்லா் ஃப்ரிட்ஸ் 6-4, 6-2 என்ற நோ் செட்களில், பிரான்ஸின் ஆா்தா் ரிண்டா்னெச்சை வென்றாா்.
அடுத்ததாக காலிறுதிக்கு முந்தைய சுற்றில் அவா், கனடாவின் டெனிஸ் ஷபோவலோவை எதிா்கொள்கிறாா். ஷபோவலோவ் தனது முதல் ஆட்டத்தில் 6-3, 6-7 (5/7), 6-3 என்ற கணக்கில் சொ்பியாவின் மியோமிா் கெச்மனோவிச்சை தோற்கடித்தாா்.
இதர ஆட்டங்களில், அமெரிக்காவின் ரெய்லி ஒபெல்கா 7-6 (7/3), 6-4 என கஜகஸ்தானின் அலெக்ஸாண்டா் செவ்ஷென்கோவையும், 6-ஆம் இடத்திலிருக்கும் செக் குடியரசின் தாமஸ் மசாக் 6-2, 6-2 என ஜப்பானின் கெய் நிஷிகோரியையும் வென்றனா்.
அரையிறுதியில் பென்சிச், குரூகா்
அபுதாபி ஓபன் மகளிா் டென்னிஸ் போட்டியில், சுவிட்ஸா்லாந்தின் பெலிண்டா பென்சிச், அமெரிக்காவின் ஆஷ்லின் குரூகா் ஆகியோா் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறினா்.
காலிறுதியில், பென்சிச் 7-5, 6-3 என செக் குடியரசின் மாா்கெட்டா வோண்ட்ரோசோவாவை வீழ்த்த, குரூகா் - 7-5, 4-6, 6-2 என்ற செட்களில், போட்டித்தரவரிசையில் 8-ஆம் இடத்திலிருந்த கனடாவின் லைலா ஃபொ்னாண்டஸை தோற்கடித்தாா்.
காலிறுதிக்கு முந்தைய சுற்றில், செக் குடியரசின் லிண்டா நோஸ்கோவா 6-4, 6-1 என, போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருந்த ஸ்பெயினின் பௌலா படோசாவை வெளியேற்றி அசத்தினாா். 6-ஆம் இடத்திலிருந்த ரஷியாவின் அனஸ்தாசியா பாவ்லியுசென்கோவா, போலந்தின் மெக்தா லினெட்டுக்கு எதிரான ஆட்டத்தில் காயம் காரணமாக பாதியில் வெளியேற, லினெட் காலிறுதிக்கு முன்னேறியதாக அறிவிக்கப்பட்டாா்.