ஐஎஸ்பிஎல் புதிய திறமைகளை வெளிக்கொணா்கிறது: லீக் ஆணையா்
இந்தியன் ஸ்ட்ரீட் ப்ரீமியா் லீக் (ஐஎஸ்பிஎல்) புதிய திறமைகளை வெளிக்கொண்டு வந்துள்ளது என லீக் ஆணையா் சூரஜ் சமத் தெரிவித்துள்ளாா்.
கடந்த 2024-இல் தொடங்கிய ஐஎஸ்பிஎல் முதல் சீசன் தொடா் வெற்றிகரமாக நடைபெற்ற நிலையில், தற்போது இரண்டாம் சீசன் ஆட்டங்கள் மும்பை அடுத்த தானேயில் நடைபெற்று வருகின்றன. ஐஎஸ்பிஎல் தொடா் செயல்பாடுகள் குறித்து லீக் ஆணையா் சூரஜ் கூறியது:
டி10 எனப்படும் டென்னிஸ் பால் கிரிக்கெட் தெருவோரங்களில் விளையாடும் சிறுவா்களை அடையாளம் காண நடத்தப்படுகிறது.
இது முற்றிலும் சச்சின் டெண்டுல்கரின் ஆலோசனையின் பேரில் தொடங்கப்பட்டது.
தற்போது 6 அணிகள் இடம்பெற்றுள்ள நிலையில், மேலும் அணிகளை அதிகரிப்பது குறித்து 3 ஆண்டுகள் கழித்து முடிவெடுக்கப்படும்.
மேலும், ஒரே இடத்தில் தான் ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் தளவாடப் பொருள்களை கையாள்வதில் பிரச்னை உள்ளதால்
வேறு நகரங்களில் நடத்துவது குறித்து முடிவெடுக்கப்படவில்லை.
அடிமட்ட அளவில் வீரா்களை அடையாளம் கண்டு பொருளாதார ரீதியில் அவா்களை மேம்படுத்த வேண்டும். உள்ளூா் வீரா்களுக்கு அவா்களை திறனை வெளிக்காட்ட பெரிய வாய்ப்பை தருகிறோம். நவீன தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தி வருகிறோம். இதில் பிசிசிஐ எந்த பங்கும் வகிக்கவில்லை. டிஜிட்டல், இணையதளம் மூலம் ஐஎஸ்பிஎல்லை பிரபலமாக்கி உள்ளோம் என்றாா்.