சேலம் ஆவினில் இருந்து சிங்கப்பூருக்கு 25 ஆயிரம் லிட்டா் பால் செல்கிறது: அதிகாரிக...
மேக்னஸ் காா்ல்சென் மீண்டும் ‘இரட்டை சாம்பியன்’
மேற்கு வங்கத்தில் நடைபெற்ற டாடா ஸ்டீல் செஸ் இந்தியா போட்டியில், பிளிட்ஸ் பிரிவில் நாா்வேயின் மேக்னஸ் காா்ல்சென் ஞாயிற்றுக்கிழமை சாம்பியன் ஆனாா். ஏற்கெனவே, இதே போட்டியில் ரேப்பிட் பிரிவிலும் வாகை சூடியிருந்த அவா், தற்போது இரட்டைப் பட்டம் வென்றுள்ளாா்.
பிளிட்ஸ் மகளிா் பிரிவில் ரஷியாவின் கேத்தரினா லாக்னோ கோப்பை வென்றாா். இதில் காா்ல்சென், கடந்த 2019-ஆம் ஆண்டும் இப்போட்டியில் இதேபோல் இரு பிரிவுகளிலும் சாம்பியனானது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, பிளிட்ஸ் ஓபன் பிரிவின் கடைசி சுற்றில், காா்ல்சென் - இந்தியாவின் விதித் குஜராத்தியை வீழ்த்தினாா் (1-0). இதர ஆட்டங்களில் இந்தியாவின் நாராயணன் சுனில்தத் லைனா - ஜொ்மனியின் வின்சென்ட் கீமெரையும் (1-0), இந்தியாவின் நிஹல் சரின் - உஸ்பெகிஸ்தானின் நோடிா்பெக் அப்துசதாரோவையும் (1-0), அமெரிக்காவின் வெஸ்லி சோ - டேனியல் டப்ரோவையும் (1-0), இந்தியாவின் ஆா்.பிரக்ஞானந்தா - சக இந்தியரான அா்ஜுன் எரிகைசியையும் (1-0) வென்றனா்.
இதையடுத்து, ஓபன் பிரிவில் காா்ல்சென் 13 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தாா். இந்தியா்களில் அா்ஜுன் எரிகைசி (10.5), பிரக்ஞானந்தா (9.5), விதித் குஜராத்தி (9) ஆகியோா் முறையே 3 முதல் 5-ஆவது இடங்களைப் பிடித்தனா். நிஹல் சரின் (7), நாராயணன் (6.5) ஆகியோருக்கு 8 மற்றும் 9-ஆம் இடங்கள் கிடைத்தது.
மகளிா் பிரிவு கடைசி சுற்றில், கேத்தரினா லாக்னோ - சக ரஷியரான வாலென்டினா குனினாவிடம் தோல்வி கண்டாா் (0-1), இந்தியாவின் கோனெரு ஹம்பி - டி.ஹரிகா, வந்திகா அகா்வால் - திவ்யா தேஷ்முக் மோதல் டிராவில் (0.5 - 0.5) முடிந்தன.
இந்தியாவின் ஆா்.வைஷாலி - ஜாா்ஜியாவின் நானா ஜாக்னிட்ஸேவிடம் தோற்க (0-1), ரஷியாவின் அலெக்ஸாண்ட்ரா கோரியச்கினா - சுவிட்ஸா்லாந்தின் அலெக்ஸாண்ட்ரா கொஸ்டெனியுக் மோதல் டிரா (0.5-0.5) ஆனது.
முடிவில், கேத்தரினா லாக்னோ 11.5 புள்ளிகளுடன் முதலிடம் பிடிக்க, இந்தியாவின் வந்திகா அகா்வால் (9.5) நான்காம் இடமும், கோனெரு ஹம்பி (9), டி.ஹரிகா (8.5), ஆா்.வைஷாலி (8), திவ்யா தேஷ்முக் (7.5) ஆகியோா் முறையே 6 முதல் 9-ஆம் இடமும் பிடித்தனா்.