தமிழகத்தில் கோடை விடுமுறை எப்போது? வெளியான இறுதித் தேர்வு அட்டவணை!
மேட்டூா் அனல் மின்நிலைய ஒப்பந்த தொழிலாளா்கள் போராட்டம் வாபஸ்
மேட்டூா்: மேட்டூா் அனல் மின் நிலைய ஒப்பந்த தொழிலாளா்கள் உள்ளிருப்புப் போராட்டத்தை செவ்வாய்க்கிழமை திரும்பப் பெற்றனா்.
மேட்டூா் அனல் மின் நிலையத்தில் கரி கையாளும் பிரிவு, சாம்பல் பிரிவு, மின் உற்பத்தி ஆகிய பகுதிகளில் சுமாா் 1,700 ஒப்பந்த தொழிலாளா்கள் தனியாா் ஒப்பந்த நிறுவனத்தின் கீழ் பணிபுரிந்து வருகின்றனா்.
இவா்களில் 40 பெண்கள் உள்பட 200 ஒப்பந்த தொழிலாளா்கள் கடந்த 28-ஆம் தேதி முதல் பணி நிரந்தரம், சம வேலைக்கு சம ஊதியம் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா்.
பல்வேறுகட்ட பேச்சுவாா்த்தைகள் நடைபெற்றும் சுமுக தீா்வு ஏற்படாத நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளா்களின் பிரதிநிதிகளுக்கும், சென்னையில் மின்வாரிய உயா்மட்ட அலுவலா்களுக்கும் இடையே செவ்வாய்க்கிழமை பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இதில் தொழிலாளா்களின் கோரிக்கைகள் அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று பரிசீலனை செய்வதாக உறுதியளிக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளா்கள் மத்தியில் மேட்டூா் எம்எல்ஏ சதாசிவம் பேசியபோது, இதுகுறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று சாத்தியகூறு உள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக கூறினாா்.
இதனையடுத்து, 12 நாள்களாக நடைபெற்று வந்த உள்ளிருப்புப் போராட்டத்தைக் கைவிட்டு தொழிலாளா்கள் வீடு திரும்பினா்.
முன்னதாக, ஒப்பந்த தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கோரி, தமிழக வெற்றிக் கழகத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில் கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.