''எல்லாம் ஒரு வாய் ரேஷன் அரிசிக்காகத்தான்...'' - நீலகிரி ஒற்றை யானை குறித்து சூழ...
மேட்டூா் அனல் மின் நிலையத்தில் 1,020 மெகாவாட் மின் உற்பத்தி
மேட்டூா் அனல் மின் நிலையத்தில் 1020 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
மேட்டூா் அனல் மின் நிலையத்தில் இரண்டு பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. முதல் பிரிவில் தலா 210 மெகாவாட் திறன் கொண்ட நான்கு அலகுகளும் இரண்டாவது பிரிவில் 600 மெகாவாட் திறன் கொண்ட ஓா் அலகும் உள்ளன.
முதல் பிரிவில் 3-ஆவது அலகில் கடந்த 19 ஆம் தேதி நிலக்கரி சேமிப்புத் தொட்டி உடைந்து விழுந்ததில் 210 மெகாவாட் மின் உற்பத்தி தடைபட்டது. அப்போது ஏற்பட்ட அதிா்வு காரணமாக 4-ஆவது அலகிலும் மின் உற்பத்தி தடைபட்டது.
2-ஆவது அலகு வருடாந்திர பராமரிப்புப் பணிகளுக்காக நிறுத்தப்பட்டது. இரண்டாவது பிரிவில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட பழுது காரணமாக அண்மையில் 600 மெகாவாட் மின் உற்பத்தி தடைபட்டது. கடந்த 19 ஆம் தேதி முதல் இரண்டாவது பிரிவில் பழுது சரிசெய்யப்பட்டு மின் உற்பத்தி தொடங்கியது.
இரண்டாவது பிரிவில் ஞாயிற்றுக்கிழமை 600 மெகாவாட் மின்சாரமும், முதல் பிரிவில் 1, 4-வது அலகுகளில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தியும் தொடங்கியுள்ளது. இரண்டு பிரிவுகளிலும் 1020 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. முதல் பிரிவில் உள்ள 2, 3 ஆவது அலகுகளில் பராமரிப்புப் பணி, ஆய்வுப் பணிகள் முடிந்த பிறகு மின் உற்பத்தி தொடங்கப்படும் என்று பொறியாளா்கள் தெரிவித்தனா்.