மேட்டூா் அரசு மருத்துவமனையில் தங்கியிருந்தவரிடம் திருட்டு: இளைஞா் கைது
மேட்டூா் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பிரசவத்துக்காக தங்கியிருந்த பெண்ணின் கணவரிடம் பணத்தை திருடிய இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
மேட்டூா் அருகே உள்ள பாலமலை, கெம்மம்பட்டியைச் சோ்ந்தவா் சதீஷ் (29). இவரது மனைவி கீதா பிரசவத்துக்காக மேட்டூா் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாா். மனைவிக்கு உதவியாக சதீஷும் மருத்துவமனை வளாகத்தில் தங்கியிருந்தாா். இரவில் தூங்கிக் கொண்டிருந்தபோது சதீஷ் பையில் வைத்திருந்த ரூ. 50 ஆயிரம் ரொக்கம், வெள்ளிக் கொலுசு, கைப்பேசி ஆகியவற்றை மா்மநபா் திருடிச் சென்று விட்டாா்.
இதுகுறித்த அவா் மேட்டூா் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தாா். இதனையடுத்து போலீஸாா், மருத்துவமனையில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனா்.
இதில் பணத்தை திருடியது மாதையன்குட்டையைச் சோ்ந்த இளைஞா் சஞ்சை (25) என்பது தெரியவந்தது.இதையடுத்து வீட்டில் பதுங்கியிருந்த சஞ்சையை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து, அவரிடமிருந்து ரூ. 47 ஆயிரம் ரொக்கம், வெள்ளிக் கொலுசு மற்றும் கைப்பேசியை பறிமுதல் செய்தனா்.