பாஜக போராட்டத்துக்கு திருமாவளவன் வரவேற்பு!
டாஸ்மாக்குக்கு எதிராக பாரதிய ஜனதா கட்சியினர் நடத்தும் போராட்டத்தை வரவேற்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
மேலும், கூட்டணிக் கட்சியாக இருந்தாலும் மது ஒழிப்பு வாக்குறுதியை நிறைவேற்ற தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் அலுவலகம் மற்றும் மதுபான ஆலைகளில் நடத்திய சோதனையில் சுமார் ரூ. 1,000 கோடி ஊழல் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டிருந்தது.
இந்த ஊழலை கண்டித்து சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக அறிவித்திருந்தது.
இதனிடையே, அனுமதி அளிக்காத போராட்டத்துக்குச் சென்ற பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தமிழிசை செளந்தரராஜன், வானதி சீனிவாசன் உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இதையும் படிக்க : போராட்டத்துக்குச் சென்ற அண்ணாமலை கைது!
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவனிடம் பாஜக போராட்டம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, மதுவுக்கு எதிராக பாஜக நடத்தும் போராட்டத்தை வரவேற்கிறேன், மதுவுக்கு எதிராக யார் போராட்டம் நடத்தினாலும் வரவேற்போம் எனத் தெரிவித்தார்.
மேலும், “கூட்டணிக் கட்சியாக இருந்தாலும் மது ஒழிப்பு வாக்குறுதியை நிறைவேற்ற தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். மதுபானக் கடைகளை மூடப்பட வேண்டும் என்பது எங்கள் நிலைப்பாடு.
அரசியல் காரணங்களுக்காக பாஜகவினர் போராட்டம் நடத்தினால், அவர்களால் எந்த முன்னேற்றமும் காண முடியாது. பாஜக ஆளும் மாநிலங்களில் மதுவிலக்கு அமலில் இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. அந்த மாநிலங்களில் மது ஒழிப்பை அமல்படுத்தினால் வரவேற்று பாராட்டலாம்” எனத் தெரிவித்தார்.