`நடிகரின் பின்னால் ஆட்டு மந்தைகளைப்போல செல்லும் இளைஞர்கள் எனக்கு தேவையில்லை!’ - திருமாவளவன் ஆவேசம்
விழுப்புரத்தில் நேற்று நடைபெற்ற தேர்தல் அங்கீகார வெற்றி விழாவில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், ``நடிகர்கள் கட்சி தொடங்கும் போதெல்லாம் ஊடகங்களில் ஒரு செய்தியை எழுதுவார்கள். விஜயகாந்த் அவர்கள் கட்சி தொடங்கியபோது விடுதலைச் சிறுத்தைகள் தான் பலவீனப்படும் என்று கருத்துச் சொன்னவர்களும், ஊடகங்களில் விவாதித்தவர்களும் உண்டு. ஆனால் விடுதலைச் சிறுத்தைகள் தனித்தன்மையோடு, அதே வீரியத்தோடு களத்திலே தொடர்ந்து நீடித்து நிற்கிறது என்பதுதான் வரலாறு.
`விடுதலைச் சிறுத்தைகளை சேதப்படுத்த முடியாது’
யார் யார் புதிய புதிய கட்சிகளை தொடங்கினாலும், அவர்களுக்கு என்ன செல்வாக்கு இருந்தாலும் விடுதலைச் சிறுத்தைகளை அவர்களால் சேதப்படுத்த முடியாது. அதற்கு காரணம் இந்த இயக்கத்தின் களம் முற்றிலும் புதிது. இந்த இயக்கத்தின் கொள்கைகள், கோட்பாடுகள் புதிது. அந்த அடிப்படையில்தான் திருமாவளவனுக்கும், இயக்கத்துக்கும் இடையில் இணைப்பும் பிணைப்பும் இருக்கிறது. எனவே சினிமா கவர்ச்சியின் மூலமாக இந்த இளைஞர்களை எவராலும் திசை மாற்றிவிடவோ, மடை மாற்றிவிடவோ முடியாது என அப்போதே நான் சொன்னேன்.

`அந்த இளைஞர்கள் திருமாவளவனுக்கு தேவையில்லை’
அது உண்மை என்று காலம் உணர்த்தியிருக்கிறது. இன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒரு மாநிலக் கட்சியாகவும் அங்கீகாரம் பெற்றிருக்கிறது. ஆனால் இப்போதும் அதைச் சொல்கிறார்கள். நடிகர் ஒருவர் கட்சி தொடங்கிவிட்டார். இந்த இளைஞர்கள் எல்லாம் அந்தப் பக்கம் ஆட்டு மந்தைகளைப் போல திரும்புவார்கள். ஒரு நடிகரின் பின்னால் இளைஞர்கள் அப்படி திரும்புவார்கள் என்றால் அந்த இளைஞர்கள் திருமாவளவனுக்கு தேவையில்லை.
அப்படிப்பட்ட இளைஞர்களை வடிகட்டி வெளியேற்றுவதுதான் கட்சிக்கு சிறப்பு. புரட்சியாளர் அம்பேத்கரின் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டு, பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரை ஏற்றுக் கொண்டு, பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்கு கோட்பாடு வழங்கிய மாமேதை காரல் மார்க்ஸ் அவர்களையும் புரிந்து கொண்டு திருமாவளவனோடு பயணிப்பவர்கள்தான் உண்மையான சிறுத்தைகளாக இருக்க முடியும். அவர்கள்தான் எனக்குத் தேவை.
`கண்ணீரை துடைத்துவிடும் பணிகளைச் செய்வோம்'
அவர்கள்தான் எப்போதும் என்னுடன் பயணிக்கக் கூடியவர்கள். அவர்களை எந்தக் கொம்பனாலும் ஈர்க்க முடியாது. திசை மாற்ற முடியாது. தேர்தல் அரசியலுக்கு வந்து 25 ஆண்டு காலம் கடந்த நிலையிலும் ஒரு பட்டாளத்தை அப்படியே கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் இயக்கம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. அதே எழுச்சி, அதே உணர்ச்சி, அதே வீரியம், அதே வேட்கை விடுதலைச் சிறுத்தைகளிடம் இன்று மேலிடுகிறது. அதில் எந்த தொய்வும் இல்லை. அப்படி கொள்கை அடிப்படையில் பண்பட்ட இயக்கமாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இருப்பதால்தான், நீண்ட நெடிய பாரம்பர்யம் மிக்க கட்சிகள் தலைவர்கள் இந்த மேடைக்கு வந்து நம்மை அங்கீகரித்து மனமாற வாழ்த்திருக்கிறார்கள்.
இது ஒரு அரசியல் கட்சியாக உருப்பெறும், அப்படி மாற்ற வேண்டும் என்று நான் எண்ணிக் கூட பார்த்ததில்லை. அப்படி ஒரு நோக்கத்திலும் நான் பொது வாழ்க்கைக்கு வரவில்லை. சாதிய கொடுமைகளால் பாதிக்கப்படும் இந்த மக்களுக்கு ஆறுதல் சொல்வதற்குக் கூட யாருமில்லையே… அவர்களுடன் களத்தில் நிற்பவர்களின் கண்ணீரை துடைத்துவிடும் பணிகளைச் செய்வோம் என்பதுதான் என் நோக்கமாக இருந்தது.

`கால் நூற்றாண்டு காலம் தாக்குபிடித்து நிற்கிறோம்’
தேர்தல் அரசியலுக்கு வரவேண்டும் என்றோ, சட்டமன்ற நாடாளுமன்ற அவைகளில் அமர வேண்டும் என்றோ எந்த திட்டமும் இல்லை. எவ்வளவு வலிகளைக் கடந்து வந்திருக்கிறோம், எவ்வளவு சவால்களை எதிர்கொண்டிருக்கிறோம், எவ்வளவு அவமானங்களையும் அவதூறுகளையும் சந்தித்திருக்கிறோம் என்பதையெல்லாம் பேசினால் விடிய விடிய நான் பேச வேண்டியிருக்கும். கண்ணீர் வடிய வடிய நாம் பேச வேண்டியிருக்கும். அடிவயிறு வலிக்க வலிக்க நான் உரைத்து முழங்க வேண்டியிருக்கும்.
அவ்வளவு வலிகளையும் தாங்கிக் கொண்டு 25 ஆண்டு காலமாக இந்த அரசியல் களத்தில் தாக்குப் பிடித்து நின்று கொண்டிருக்கிறோம். அதுதான் சாதனை, அதுதான் வெற்றி. தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தைப் பெற்றது வெற்றியல்ல. சூது சூழ்ச்சிகள் நிறைந்த இந்த தேர்தல் அரசியல் களத்தில், சதியும் வஞ்சகமும் நிறைந்த தேர்தல் களத்தில், அடாத அவதூறுகளையும் பழிகளையும் அள்ளி இறைக்கும் தேர்தல் களத்தில் எந்த பின்புலமும் இல்லாமல் கால் நூற்றாண்டு காலம் தாக்கு பிடித்து நிற்கிறோம் என்பதுதான் நம்முடைய வெற்றி.
`இது விடுதலைச் சிறுத்தைகளின் சாதனை’
மக்களும், இளைஞர்களும் நம் கட்சியில் இல்லை என்றால், தி.மு.க, அ.தி.மு.க போன்ற ஆண்ட கட்சிகள் நம் கூட்டணியில் இடம்பெற்றுவிட முடியாது. விடுதலைச் சிறுத்தைகள் மக்கள் செல்வாக்கு உள்ளவர்கள், வலுவானவர்கள். அவர்களை நம்முடன் வைத்துக் கொள்வதன் மூலம், நமக்கு வாக்கு வங்கி பரிமாற்றம் நடக்கிறது என்பதை உணர்ந்துதான் 25 ஆண்டுகளாக கூட்டணியில் வைத்திருக்கிறார்கள்.
இது விடுதலைச் சிறுத்தைகளின் சாதனை. தேர்தல் என்றால் என்னவென்றே தெரியாத நேரத்தில் 1999-ல் மூப்பனார் அவர்கள் சைக்கிள் சின்னத்தில் நம்மை போட்டியிட வைத்தார். அப்போது திட்டமிட்ட ஒரு வன்முறை. தமிழக அரசியல் வரலாற்றில் அப்படி ஒரு தேர்தல் வன்முறை நடந்திருக்காது. திருமாவளவனுக்காக மக்கள் விடிய விடிய காத்திருக்கிறார்க்ள் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாதவர்கள் வன்முறையில் ஈடுபட்டார்கள். நூற்றுக்கணக்கான கிராமங்கள் தாக்கப்பட்டன. 15 கிராமங்களை முற்றாக எரித்து சாம்பலாக்கினார்கள்.

திருமாவளவனுக்கு ஓட்டு போட்டதைத் தவிர அந்த மக்கள் எந்த குற்றமும் செய்யவில்லை. அவ்வளவு வன்முறைகளையும் தாண்டி 2.25 லட்சம் வாக்குகளைப் பெற்ற இயக்கம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. மூப்பனார் அணியில் அன்று பா.சிதம்பரம் அவர்களும் போட்டியிட்டார். அப்போது 39 தொகுதிகளில் சிதம்பரம் தொகுதியில்தான், வன்முறைகளையும் கடந்து, வாக்குச் சாவடிகளை அவர்கள் கைப்பற்றிய நிலையிலும் 2,25,580 வாக்குகள் பெற்றது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.
மற்ற அனைத்து தொகுதிகளிலும் 1 லட்சம் வாக்குகளுக்கும் குறைவுதான். ஆனால் தற்போது, தேர்தலிலே நிற்கவே இல்லை. வாக்குகள் வாங்கவே இல்லை. ஆனால் ஊடகங்கள் அவரை தூக்கி வைத்துக் கொண்டு அடுத்த முதலமைச்சர் இவர்தான் என்கிறார்கள். திருமாவளவன் ஒரு நடிகராக இருந்திருந்தால், தலித் அல்லாதவனாக இருந்திருந்தால் 1999-ம் ஆண்டிலேயே கொண்டாடி இருப்பார்கள்.
`அதிகாரப் பகிர்வு தொடர்பாக இன்றும் நமக்கு பேரம் பேசத் தெரியவில்லை'
ஆனால் அப்போது நடைபெற்ற வன்முறைதான் ஊடகங்களில் செய்தியாக வந்ததே தவிர, திருமாவளவன் வாங்கிய 2.25 லட்சம் வாக்குகள் குறித்து வரவில்லை. அப்போது மூப்பனார் எனக்கு 5 எம்.பி தொகுதிகள் கொடுத்தார். ஆனால் எனக்கு இரண்டு போதும் என்று மூன்றை அவரிடமே திருப்பிக் கொடுத்தேன். நான் எப்படிப்பட்டவன் என்று பாருங்கள். அதிகாரப் பகிர்வு தொடர்பாக இன்றும் நமக்கு பேரம் பேசத் தெரியவில்லை.
தி.மு.க-வுடன் சேர்ந்து நாம் தேர்தல் களத்தில் நிற்பது பதவிகளுக்காகவா ? அது இல்லை என்பதை அழுத்தமாக பதிவு செய்கிறேன். சாதி மத வெறியர்கள் வலுப்பெற்றால், ஏழை எளிய ஒடுக்கப்பட்ட பட்டியல் சாதி மக்களை எந்த சக்தியாலும் காப்பாற்ற முடியாது. பெரியார் கொள்கைகளை ஏற்றுக்கொண்டிருக்கும் தி.மு.க கூட்டணியில், இடது சாரிகள் நிற்கும் சூழலில் கூட சாதியவாதத்தை நம்மால் கட்டுக்குள் வைத்திருக்க முடியவில்லை. நம்முடன் தி.மு.க-வும் அதை கட்டுக்குள் வைக்க முயற்சிக்கிறது.

அப்படி இருந்தும் மேல்பாதி கோயிலுக்குள் நுழைய முடியவில்லை. யார் ஆட்சியில் இருந்தாலும், திருமாவளவன் நாளைக்கு முதலமைச்சராக இருந்தாலும் சாதிய வன்கொடுமைகளை தடுத்துவிட முடியாது என்பதுதான் யதார்த்தம். சாதி ரீதியிலான ஒடுக்குமுறை தவறு, குற்றம் என்ற எண்ணம் மக்களுக்கு வர வேண்டும். கொலைகாரன் சிறையில் இருந்து திரும்பி வருகிறான் அவனை கொண்டாடுகிறார்கள். அவன் மாவீரனா ? இது எவ்வளவு கேடான கலாசாரம் ?
இப்படிப்பட்டவர்களிடம் ஆட்சி அதிகாரம் சென்றால் என்ன ஆகும்? இதுவரை 5 முறைக்கு மேல் என்னை கொலை செய்ய வந்த கும்பல் தோல்வியடைந்து திரும்பியிருக்கின்றன. தி.மு.க-வுக்கு சொம்படிக்கிறார்கள் என்பது அற்பர்களின் விமர்சனம். அதற்கு தொண்டர்கள் ஒருபோது இசைந்துவிடக் கூடாது. இந்த இயக்கத்தை ஒட்டுமொத்த தமிழகமும் ஏற்றுக்கொள்ளும் நாள் வரும் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது” என்றார்.
Vikatan Play
இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!
https://tinyurl.com/Velpari-Vikatan-Play