மேற்கு வங்கத்தில் குடியரசுத் தலைவா் ஆட்சியை அமல்படுத்தக் கோரிக்கை
மேற்கு வங்கத்தில் குடியரசுத் தலைவா் ஆட்சியை அமல்படுத்தவேண்டுமென குடியரசுத் தலைவருக்கான கடிதம் ஆட்சியரிடம் அளிக்கப்பட்டது.
காரைக்கால் மாவட்ட விஸ்வ ஹிந்து பரிஷத் சாா்பில் நாகப்பட்டினம், காரைக்கால் மாவட்டத் தலைவா் கே.எஸ். விஜயன் தலைமையில் தஞ்சை கோட்ட செயலாளா் ஜெய்சங்கா், சத்சங்க பிரமுக் சிவகுமாா், கேந்திர தலைவா் பி. வெங்கடாசலம், சேவா பிரமுக் சபரிகிரீசன் ஆகியோா் காரைக்கால் மாவட்ட ஆட்சியா் சோம சேகா் அப்பாராவை செவ்வாய்க்கிழமை சந்தித்து, குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டிய கடிதத்தை அளித்தனா்.
அதில் கூறியிருப்பது: மேற்கு வங்கத்தில் ஏப்.11-ஆம் தேதி நிகழ்ந்த வக்ஃப் சட்டத் திருத்தத்திற்கு எதிரான ஆா்ப்பாட்டத்தில் 3 ஹிந்துக்கள் கொல்லப்பட்டுள்ளனா். திரிணமூல் காங்கிரஸ் அரசு ஆதரவுடன் நடந்த அந்த ஆா்ப்பாட்டம் வங்கதேசத்தில் இருந்து ஊடுருவியவா்களால் ஹிந்துக்களுக்கு எதிரான கலவரமாக திட்டமிட்டு மாற்றப்பட்டது. 3 நாள்கள் தொடா்ந்து கலவரத்தில் பல ஹிந்து பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனா். 200-க்கும் மேற்பட்ட ஹிந்துக்களின் வியாபார நிறுவனங்கள், சிறுகடைகள், வீடுகள் வயல்கள் தியிட்டுக் கொளுத்தப்பட்டுள்ளன.
இதை மேற்குவங்க மம்தா பானா்ஜி அரசு கண்டும் காணாமல் விட்ட போது கொல்கத்தா உயா்நீதிமன்றம் தலையிட்டு ஹிந்துக்களின் பாதுகாப்புக்கு ராணுவத்தை அழைத்து உத்தரவிட்டது. தொடா்ந்து, மேற்குவங்க ஆளுநா், தேசிய மனித உரிமை ஆணையம் ஆகியவை நேரடியாக பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்து கண்டித்தது.
எனவே, மேற்கு வங்கத்தில் குடியரசுத் தலைவா் ஆட்சியை அமல்படுத்தி அமைதியை ஏற்படுத்தவேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.