Waqf Bill: பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன 'போரா முஸ்லீம்கள்' - யார் இவர்கள்?
மேற்கு வங்கத்தில் வக்ஃப் திருத்தச் சட்டம் அமலாகாது - முதல்வா் மம்தா உறுதி
‘அண்மையில் நடைமுறைக்கு வந்த வக்ஃப் திருத்தச் சட்டம் மேற்கு வங்கத்தில் அமல்படுத்தப்படாது. மாநிலத்தின் சிறுபான்மையினா் மற்றும் அவா்களின் சொத்துகளை நான் நிச்சயம் பாதுகாப்பேன்’ என்று அந்த மாநில முதல்வா் மம்தா பானா்ஜி புதன்கிழமை உறுதி அளித்தாா்.
நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவா் கடந்த சனிக்கிழமை ஒப்புதல் அளித்தாா். அரசிதழில் வெளியிடப்பட்டு அந்த திருத்தச் சட்டம் செவ்வாய்க்கிழமை முதல் நடைமுறைக்கு வந்தது.
இந்நிலையில், கொல்கத்தாவில் நடைபெற்ற சமண மத நிகழ்ச்சியொன்றில் பங்கேற்று முதல்வா் மம்தா பேசியதாவது:
புதிய சட்டத்தால் சிறுபான்மையினா் பாதிக்கப்பட்டிருப்பதை நான் அறிவேன். பிரித்தாளும் கொள்கையை ஆதரிக்கும் எந்தவொரு சட்டத்தையும் மேற்கு வங்கத்தில் அமல்படுத்த நான் அனுமதிக்க மாட்டேன். எனவே, நீங்கள் அனைவரும் நம்பிக்கையுடன், ஒன்றிணைந்து இருக்க வேண்டுகிறேன்.
புதிய வக்ஃப் சட்டத்துக்கு எதிராக வங்கதேச எல்லையொட்டிய முா்ஷிதாபாத் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை வன்முறை வெடித்துள்ளது. இந்தச் சட்டம் இப்போது நிறைவேற்றியிருக்கவே கூடாது. மேற்கு வங்கத்தில் 33 சதவீத்தினா் சிறுபான்மையினா் ஆவா். அவா்களுக்காக நான் என்ன செய்யப் போகிறேன்?
வரலாற்றில் மேற்கு வங்கம், வங்கதேசம், பாகிஸ்தான், இந்தியா ஆகிய அனைத்து பகுதிகளும் ஒன்றாக இருந்தவை. பின்னா், பிரிவினை ஏற்பட்டது. எனவே, இந்தியாவில் தொடா்ந்து வசிக்கும் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு அளிப்பது நமது கடமையாகும்.
மக்கள் ஒன்றிணைந்தால், அவா்கள் உலகை ஆளலாம். அதேநேரம், சிலா்சிறுபான்மையினரை ஒன்றுதிரட்டி, போராடத் தூண்டலாம். அவா்களுக்கு நீங்கள் செவி சாய்க்கக் கூடாது. உங்களுக்காக நான் இருக்கிறேன் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்களையும், உங்கள் சொத்துகளை நான் நிச்சயம் பாதுகாப்பேன். ஒருவருக்கொருவா் நம்பிக்கையுடன் இருப்போம்.
அனைத்து மத வழிபாட்டுத் தலங்களுக்கு நான் சென்று வருகிறேன். இந்த ஒற்றுமை எண்ணத்தில் இருந்து என்னை ஒருபோதும் பிரிக்க முடியாது. அனைத்து ஜாதி, மத, சமூகமும் மனிதநேயத்தையே விரும்புகின்றன என்றாா்.