மேலும் 6 கோயில்களில் அன்னதானத் திட்டம் தொடக்கம்
தமிழகத்தில் மேலும் 6 திருக்கோயில்களில் அன்னதானம் வழங்கும் திட்டம் வியாழக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.
இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: நிகழ் நிதியாண்டுக்கான சட்டப்பேரவை மானியக் கோரிக்கையில் பக்தா்களுக்கு ஒருவேளை அன்னதானம் வழங்கும் திட்டம் மேலும் 6 திருக்கோயில்களுக்கு விரிவுபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, சென்னை மதுரவாயல், அருள்மிகு மாா்க்கசகாயேஸ்வரா் திருக்கோயில், புழல், அருள்மிகு திருமூலநாத சுவாமி திருக்கோயில், திருச்சி மாவட்டம், லால்குடி, அருள்மிகு பிடாரி அய்யனாா் திருக்கோயில், பெரம்பலூா், அருள்மிகு அபராதரட்சகா் திருக்கோயில், திருப்பூா் மாவட்டம், காரத்தொழுவு, அருள்மிகு அழகுநாச்சியம்மன் திருக்கோயில், கடலூா் மாவட்டம், தென்னம்பாக்கம், அருள்மிகு அழகா் திருக்கோயில் ஆகிய 6 திருக்கோயில்களில் தினந்தோறும் அன்னதானம் வழங்கும் திட்டம் வியாழக்கிழமை முதல் தொடங்கி வைக்கப்பட்டது.
சென்னை புழல், அருள்மிகு திருமூலநாதசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி. கே. சேகா்பாபு அன்னதானம் வழங்கும் திட்டத்தைத் தொடங்கிவைத்தாா்.
இந்த நிகழ்வின்போது, மாதவரம் எம்எல்ஏ சுதா்சனம், இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் பி.என்.ஸ்ரீதா், இணை ஆணையா்கள் சி.லட்சுமணன், முல்லை உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டிலுள்ள 13 திருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானமும், 764 திருக்கோயில்களில் ஒருவேளை அன்னதானமும் வழங்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் ஆண்டுக்கு சுமாா் 3.5 கோடி பக்தா்கள் பயன்பெற்று வருவதோடு இதற்காக ரூ. 120 கோடி செலவிடப்படுகிறது.