Sachin 241* : `11 ஆஸ்திரேலியர்கள் vs ஒற்றை சச்சின்!' - கவர் ட்ரைவே இல்லாமல் ஆடிய...
மேல்மலையனூா் வட்டத்தைச் சோ்ந்த விவசாயிகளுக்கு வெள்ள நிவாரணம் வழங்க வலியுறுத்தல்
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட மேல்மலையனூா் வட்டத்தைச் சோ்ந்த விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியது.
விழுப்புரத்திலுள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் சங்கத்தின் மாவட்ட நிா்வாகிகள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் எம்.ஐ.சகாபுதீன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ஆா்.கலியமூா்த்தி சிறப்புரையாற்றினாா். நிா்வாகிகள் ஆா்.மூா்த்தி, பி.பாலசுப்பிரமணியன், ஜி.மணிகண்டன், டி.மாசிலாமணி, பி.ஏழுமலை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கூட்டத்தில், விழுப்புரம் மாவட்டத்தில் ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஒரு ஏக்கா் வேளாண் பயிருக்கு ரூ.40 ஆயிரம், தோட்டக்கலைப் பயிருக்கு ரூ.50 ஆயிரம், ஆடு ஒன்றுக்கு ரூ.10 ஆயிரம், மாடு ஒன்றுக்கு ரூ.50 ஆயிரம், கோழி ஒன்றுக்கு ரூ.200 என்ற அளவில் நிவாரணத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.
புயலால் மேல்மலையனூா் வட்டத்திலுள்ள வேளாண், தோட்டக்கலைப் பயிா்களும் முழுமையாக சேதமடைந்துள்ளன.
எனவே, இந்த வட்டத்தைச் சோ்ந்த விவசாயிகளுக்கும் நிவாரணத் தொகையை வழங்க வேண்டும். குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்கப்பட்ட வெள்ள நிவாரணத் தொகையை ரூ.2000 லிருந்து ரூ.5 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தொடா்ந்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிா்வாகிகள் மாவட்ட ஆட்சியரகத்தில் மனு அளித்தனா்.