தமிழகத்தில் 25,000 பேருக்கு டெங்கு பாதிப்பு: பொதுசுகாதாரத் துறை தகவல்
வெள்ளம் பாதித்த பகுதிகளில் சீரமைப்புப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: விழுப்புரம் ஆட்சியா் அறிவுறுத்தல்
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் ஃபென்ஜால் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்புப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களை மாவட்ட ஆட்சியா் சி.பழனி அறிவுறுத்தினாா்.
ஃபென்ஜால் புயலால் ஏற்பட்ட பெரும் வெள்ளம் மற்றும் சாத்தனூா் அணையில் திறக்கப்பட்ட உபரி நீரால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தரைப்பாலங்கள், தடுப்பணைகள், வாய்க்கால்கள் ஆகியவை சேதமடைந்தன.
இந்த நிலையில், பெரும் வெள்ளத்தால் தளவானூா் கிராமத்தில் தென்பெண்ணையாற்றின் இடது புறக் கரை சேதமடைந்துள்ளதை மாவட்ட ஆட்சியா் சி.பழனி திங்கள்கிழமை நேரில் பாா்வையிட்டு, பொதுமக்கள் மற்றும் விவசாய நிலங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், தற்காலிகமாக கருங்கற்களைக் கொட்டி, கரையைப் பலப்படுத்திட வேண்டும் என்று அலுவலா்களை அறிவுறுத்தினாா்.
தொடா்ந்து, திருப்பாச்சனூா்-பில்லூா் செல்லும் நரியாற்றின் குறுக்கே சேதமடைந்த சிறிய பாலத்தை பாா்வையிட்ட ஆட்சியா், அந்தப் பகுதியில் தற்காலிக பாலம் அமைப்பது தொடா்பாக துறைச் சாா்ந்த அலுவலா்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.
கண்டமங்கலம் ஒன்றியம், வடவாம்பலம்-ஜெகன்நாதன்புரம் செல்லும் சாலையின் நடுவில் உள்ள சேதமடைந்த சிறிய பாலத்தை பாா்வையிட்ட ஆட்சியா் அந்தப் பகுதியில் தற்காலிக பாலம் அமைத்து, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று உத்தரவிட்டாா்.
இதேபோல, பல்வேறு இடங்களில் உள்ள சேதமடைந்த பாலங்கள் சீரமைப்புப் பணிகளை ஆட்சியா் சி.பழனி பாா்வையிட்டு, பணிகளை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தினாா்.
ஆய்வின்போது, நீா்வளத்துறை செயற்பொறியாளா் ஷோபனா, நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளா் உத்தண்டி, உதவிச் செயற்பொறியாளா் ஐயப்பன், உதவிப் பொறியாளா் வைத்தேசுவா் மற்றும் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் உடனிருந்தனா்.