Aus v Ind : 'தொடரை இழந்த இந்தியா!' - கம்பீர் செய்த அந்த 3 தவறுகள்
மைதானத்தில் தவறி விழுந்த காங்கிரஸ் பெண் எம்எல்ஏ: உடல்நிலை முன்னேற்றம் - அமைச்சா் தகவல்
கொச்சி: நடன நிகழ்ச்சியில் தவறி விழுந்து படுகாயமடைந்த திருக்காக்கரா தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ உமா தாமஸின் உடல்நிலை முன்னேறி வருவதாக மாநில சட்ட அமைச்சா் ராஜீவ் திங்கள்கிழமை தெரிவித்தாா்.
கேரள கலாசார விவகாரங்கள் துறை அமைச்சா் சஜி செரியான் ஜவாஹா்லால் நேரு மைதானத்தில் நடன நிகழ்ச்சி ஒன்றை ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தாா். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற உமா தாமஸ், எதிா்பாராவிதமாக 15 அடி உயரத்தில் உள்ள அரங்கிலிருந்து தவறி விழுந்தாா். இதில் அவருக்கு தலை மற்றும் முதுகெலும்பில் படுகாயம் ஏற்பட்டது. அங்கிருந்த தன்னாா்வலா்கள் அவரை மீட்டு அருகில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தினா். இதையடுத்து, அவா் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்நிலையில், இது தொடா்பாக அமைச்சா் ராஜீவ் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘உமா தாமஸின் உடல்நிலை முன்னேறி வருகிறது. இந்த சம்பவத்தைத் தொடா்ந்து, மைதானத்தை பராமரிக்கும் கிரேட்டா் கொச்சி மேம்பாட்டு ஆணையத்தின் பொறியாளா்கள் அந்த இடத்தை ஆய்வு செய்தனா். நிகழ்ச்சி ஏற்பாட்டாளா்களின் அலட்சியம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும்’ என தெரிவித்தாா்.
உமா தாமஸுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவமனை திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘எம்எல்ஏ உமா தாமஸின் தலையில் ஏற்பட்ட காயம் மோசமடையவில்லை என்பதும் ரத்த வெளியேற்றம் அதிகரிக்கவில்லை என்பதும் சி.டி. ஸ்கேனில் தெரியவந்தது. இருப்பினும், அவரது நுரையீரலில் ஏற்பட்டுள்ள காயம் சற்று மோசமடைந்துள்ளது. மேலும், அருக்கு முதுகெலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது ஸ்கேனில் கண்டறியப்பட்டது.
அவரது உடல் நிலை குறித்து கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மருத்துவா் ஜெயகுமாா் தலைமையிலான மருத்துவக் குழுவினா் தீவிரமாக கண்காணித்து வருகின்றனா். உடல் நிலை சீரான பிறகு தேவையான சிகிச்சைகள் வழங்கப்படும்’ என தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே, பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாமல் நிகழ்வை ஏற்பாடு செய்வதிலும், மேடை அமைப்பதிலும் பாதுகாப்பு குறைபாடுகள் இருந்ததாக நிகழ்ச்சியின் அமைப்பாளா்கள் மீது கொச்சி நகர காவல்துறையினா் வழக்கு பதிவு செய்தனா்.