சிவாஜி இல்லத்தின் உரிமையாளர் பிரபுதான்! ஜப்தி உத்தரவு ரத்து!
மொட்டைமாடியில் கஞ்சா வளர்த்த மத்திய அரசு அதிகாரி; தென்னையில் கள் இறக்கும் தொழிலாளியால் சிக்கினார்!
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள மத்திய கணக்கு மற்றும் தணிக்கைத்துறை அலுவலகத்தில் அஸிஸ்டெண்ட் ஆடிட் ஆப்பிசராக ராஜஸ்தானைச் சேர்ந்த ஜெதின்(27) என்பவர் பணிபுரிந்துவந்தார். இவர் திருவனந்தபுரம் கம்லேஸ்வரம் கைரளி நகரில் வாடகை வீட்டில் வசித்துவந்தார். முதல் மாடியில் வசித்த ஜெதினுடன் பீகார் மற்றும் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 2 அதிகாரிகளும் வசித்துவந்தனர். ஜெதின் முதல் மாடியில் கஞ்சா செடிகளை வளர்த்ததால் கீழ் பகுதியிலிருந்து பார்க்க முடியாது. ஜெதின் வசித்த வீட்டை ஒட்டி உள்ள நிலத்தில் தென்னை மரங்கள் உள்ளன. அந்த தென்னை மரங்களில் தொழிலாளர்கள் தினமும் கள் எடுப்பது வழக்கம். அப்படி கள் எடுக்க தென்னை மரத்தில் தொழிலாளி ஒருவர் ஏறியபோது ஜெதின் தனது அறையை ஒட்டி கஞ்சா செடிகள் வளர்ப்பதை தொழிலாளி பார்த்துள்ளார். இதற்கிடையே கள் இறக்கப்படும் தென்னை மரங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக கடந்த வியாழக்கிழமை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸார் அந்த தோப்புக்குச் சென்றுள்ளர். அவர்களிடம் மத்திய அரசு அதிகாரி வீட்டில் கஞ்சா வளர்ப்பது குறித்தும், தென்னை மரத்தில் ஏறினால்தான் கஞ்சா செடியை பார்க்க முடியும் எனவும் தகவல் தெரிவித்துள்ளார்.

அதிரடி சோதனை
இதையடுத்து திருவனந்தபுரம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு ஸ்குவாட் போலீஸ் அதிகாரிகள் ஷாஜகான், திலீப் ஆகியோர் வழிகாட்டுதலின் படி ஜெதின் வசித்த வீட்டில் அதிரடியாக சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் தொட்டியில் நடப்பட்டு நான்கு மாதங்கள் ஆன 5 கஞ்சா செடிகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றின் நீளம் சுமார் 56 சென்டி மீட்டர் இருந்தாக மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸார் தெரிவித்தனர். அவரிடம் இருந்து கஞ்சா விதைகளும், கஞ்சா புகைக்க பயன்படுத்தும் உபகரணங்களும் மீட்கப்பட்டன. ஜெதின் வசிக்கும் அறையில் இருந்து கஞ்சா செடிகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவருடன் வசித்த மற்ற 2 பேருக்கும் இதில் பங்கில்லை என விசாரணையில் தெரியவந்ததை அடுத்து அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸார் கூறுகையில், "கடந்த 11 மாதங்களாக ஜெதின் இந்த வீட்டில் வசித்து வந்துள்ளார். ரகசிய தகவலின் அடிப்படையில் நாங்கள் சோதனையில் ஈடுபட்டபோது செடித்தொட்டியில் வளர்க்கப்பட்ட 5 கஞ்சா செடிகளை கண்டுபிடித்து மீட்டோம். அந்த செடிக்கு உரமிட்டு, தண்ணீர் ஊற்றி வளர்த்திருகிறார் ஜெதின். 2 பாக்கெட்டுகளில் இருந்த கஞ்சா விதைகளையும் பறிமுதல் செய்துள்ளோம். வீடு வாடகை பத்திரம் ஜெதின் பெயரில் உள்ளது. இப்போது ஜெதினை மட்டும் கைது செய்துள்ளோம். வேறு யாருக்காவது இதில் பங்கு உள்ளதா என விசாரணை நடத்தி வருகிறோம்" என்றனர்.