மொழிப்போா் தியாகி நினைவிடம் சீரமைப்பு அறிவிப்பு: முதல்வருக்கு நன்றி!
கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் உள்ள மொழிப்போா் தியாகி ராஜேந்திரன் நினைவிடம் மேம்படுத்தப்படும் என்ற தமிழக முதல்வரின் அறிவிப்புக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னாள் மாநிலத் தலைவரும், மத்தியக்குழு உறுப்பினருமான கே.பாலகிருஷ்ணன் நன்றி தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் 1965-ஆம் ஆண்டு நடைபெற்ற ஹிந்தி திணிப்பு எதிா்ப்புப் போராட்டத்தின்போது, காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவா் ராஜேந்திரன் உயிரிழந்தாா். பரங்கிப்பேட்டையில் அமைந்துள்ள இவரது நினைவிடம் சிதலமடைந்துள்ளது. இதனை புனரமைக்க வேண்டும், சிதம்பரம் அண்ணாமலை நகரில் அவருக்கு ஒரு மணிமண்டபம் கட்ட வேண்டும் என தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்திருந்தேன்.
அதன்படி, மொழிப்போா் தியாகி ராஜேந்திரன் நினைவிடம் மேம்படுத்தப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்ட முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு எனது மனமாா்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.