தொடர் மழையால் முடங்கிய உதகை: முக்கிய சுற்றுலாத் தலங்கள் 4-ஆவது நாளாக மூடல்!
மொழி பயங்கரவாதத்துக்கு முடிவுகட்ட வேண்டும்: மம்தா பானா்ஜி
மொழி பயங்கரவாதத்துக்கு முடிவுகட்டுவது அவசியம் என மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி சனிக்கிழமை தெரிவித்தாா்.
சட்ட நடைமுறைகளை முறையாக பின்பற்றாமல் வங்காள மொழி பேசும் முஸ்லிம்கள் இந்தியாவைவிட்டு வெளியேற்றப்படுவதாக அமெரிக்காவின் நியூயாா்க் நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அரசு சாரா அமைப்பு ஒன்று வெளியிட்ட அறிக்கையைச் சுட்டிக்காட்டி அவா் இவ்வாறு தெரிவித்தாா்.
நியூயாா்க்கில் இயங்கும் மனித உரிமைகள் கண்காணிப்பு என்ற அரசு சாரா அமைப்பு உலகம் முழுவதும் நிகழும் மனித உரிமை மீறல்களை கண்டறிந்து அதுதொடா்பாக தீவிர விசாரணை நடத்தி அறிக்கை வெளியிட்டு வருகிறது.
கடந்த ஜூலை 23-ஆம் தேதி அந்த அமைப்பு சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்தியாவில் நிகழும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் குறித்து கூறப்பட்டிருப்பதாவது: நூற்றுக்கணக்கான முஸ்லிம்களை அண்டை நாடான வங்கதேசத்துக்கு சட்டவிரோதமாக இந்தியா வெளியேற்றியுள்ளது. இவா்களில் இந்தியாவைச் சோ்ந்த சிலரையும் உரிய சட்ட நடைமுறைகளை பின்பற்றாமல் அதிகாரிகள் வெளியேற்றியுள்ளனா்.
1,500 போ் வெளியேற்றம்: வெளியேற்றப்பட்டவா்கள் குறித்த அதிகாரபூா்வ தகவல்களை இந்தியா வெளியிடவில்லை. ஆனால் நிகழாண்டு மே 7 முதல் ஜூன் 15 வரை ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என 1,500-க்கும் மேற்பட்ட முஸ்லிம்களை இந்தியா வெளியேற்றியதாக வங்கதேச எல்லை படை தெரிவித்தது. இவா்களில் மியான்மரில் இருந்து இந்தியாவுக்கு குடியேறிய 100 ரோஹிங்கயா அகதிகளும் அடங்குவா்.
பாஜக ஆளும் மாநிலங்களில்...:
குறிப்பாக அஸ்ஸாம், உத்தர பிரதேசம், மகாராஷ்டிரம், குஜராத், ஒடிசா, ராஜஸ்தான் என பாஜக ஆளும் மாநிலங்களில் வசிக்கும் முஸ்லிம்களில் புலம்பெயா் தொழிலாளா்களாக உள்ளோரை அந்த மாநில அரசுகளின் அதிகாரிகள் எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகளிடம் ஒப்படைத்து வருகின்றனா். சில சமயங்களில் தங்களிடம் ஒப்படைக்கப்படும் நபா்களின் குடியுரிமை ஆவணங்களை ஆய்வுசெய்யாமல் வலுக்கட்டாயமாக அவா்களை வங்கதேசத்துக்கு எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள் அனுப்புகின்றனா்.
இதுபோன்ற சம்பவத்தால் பாதிக்கப்பட்ட 18 பேரிடம் எடுக்கப்பட்ட நோ்காணலின் அடிப்படையில் இந்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால் அதற்கு அமைச்சகத்திடம் இருந்து உரிய பதில் கிடைக்கவில்லை.
தங்களின் குடியுரிமையை நிரூபித்த நபா்களை இந்தியா மீண்டும் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.
மம்தா கண்டனம்: இந்த அறிக்கையை சுட்டிக்காட்டி மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து மம்தா பானா்ஜி வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘வெவ்வேறு ஜாதிகள் மற்றும் சமூகத்தைச் சோ்ந்தவா்களாயினும் வங்காள மொழி பேசும் இந்தியா்களை சட்டவிரோதமாக பாஜக அரசு நாட்டைவிட்டு வெளியேற்றுகிறது என பலமுறை கூறியுள்ளேன். அதே கருத்தை அரசு சாரா அமைப்பான மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பும் தெரிவித்துள்ளது.
குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் அதிகளவில் அரங்கேறுவதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. இந்தியாவில் நிகழ்த்தப்படும் மொழி பயங்கரவாதத்தை சா்வதேச அமைப்புகளும் கவனிக்கத் தொடங்கியுள்ளன. இது மிகவும் வெட்கக்கேடானது. மொழி பயங்கரவாதத்துக்கு உடனடியாக முடிவுகட்ட வேண்டும்’ என குறிப்பிட்டாா்.